ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சம்பளம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக உயரவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக பெறுகிறார். ஆனால் நிறுவனத்தின் மற்ற இயக்குநர்களின் சம்பளம் உயர்ந்திருக்கிறது.
கடந்த 2008-09-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக எடுத்துக்கொள்கிறார். நிறுவனத்தின் இயக்குநர் குழு இவரின் சம்பளத்தை ரூ.38.75 கோடியாக உயர்த்த அனுமதி வழங்கி இருந்தாலும், முகேஷ் அம்பானி தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக்கொள்ளவில்லை. உயரதிகாரிகளின் சம்பள விஷயத்தில் முகேஷ் அம்பானி முன்னுதாரணமாக இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் இவரின் சம்பளம் ரூ.4.16 கோடி. இதர சலுகைகள் ரூ.60 லட்சம். ஓய்வுக்கால சலுகைகள் ரூ.71 லட்சம் மற்றும் லாபத்தில் கிடைத்த பங்கு ரூ.9.53 கோடி என மொத்தம் ரூ.15 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.
நிறுவனத்தின் தலைவர்களின் சம்பளம் அதிகமாக இருக்கிறது என்னும் விவாதம் 2009-ம் ஆண்டு இருந்தது. அதனால் 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய சம்பளத்தை ரூ.15 கோடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என முகேஷ் அம்பானி முடிவெடுத்தார்.
அதே சமயத்தில் இயக்குநர் குழு உறுப்பினர்களின் சம்பளம் உயர்ந்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் உறவினர் நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹீதல் ஆர் மெஸ்வானியின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் தலா ரூ.16.58 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் தலா ரூ.12.03 கோடியாக இவர்களின் சம்பளம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி