அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீததுக்கும் கூடுதலாக இருக்கும் என்று திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இப்போதுள்ள சூழ்நிலையில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி விட்டதாக உறுதியாகக் கூற முடியாது. எனினும், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.எனவே, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியைவிட பிற்பாதியில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
மத்தியில் அமைய உள்ள புதிய அரசின் கொள்கைகளைப் பொறுத்து, அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என நம்புகிறேன் என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2012-13 நிதியாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்தது. 2013-14 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 4.4 சதவீதமாகக் குறைந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இது 5.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மான்டேக், “நடப்பு நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 முதல் 2.7 சதவீதத்துக்குள் இருக்கும். முதலீட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது” என்றார்.கடந்த நிதியாண்டில் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.