வணிகம்

ஹெச்டிஎப்சி லைப், மேக்ஸ் லைப் இணைப்புக்கு ஐஆர்டிஏஐ அனுமதி மறுப்பு

செய்திப்பிரிவு

ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்துடன் மேக்ஸ் லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனம் இணைவதற்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அனுமதி மறுத் துள்ளது.

ஹெச்டிஎப்சி லைப் இன்ஷுரன்ஸ் மற்றும் மேக்ஸ் லைப் இன்ஷுரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைவதற்கான ஒப்பந்தம் 1938-ம் ஆண்டு காப்பீடு சட்டத்தின் பிரிவு 35-ஐ மீறுவதாக உள்ளது. அதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. இந்த அனுமதி மறுப்பு அறிக்கையை ஹெச்டிஎப்சி மற்றும் மேக்ஸ் லைப் இன்ஷுரன்ஸ் இரு நிறுவனங்களுக்கும் ஐஆர்டிஏஐ அனுப்பியுள்ளது. இரு நிறுவனங்களும் வேறு வாய்ப்புகளை ஆராயுமாறு ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

ஹெச்டிஎப்சி லைப் மற்றும் மேக்ஸ் லைப் இணைவதற்கு சட்ட ரீதியான ஒப்புதலை அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வழங்க மறுத்ததை அடுத்து இந்த இணைப்பிற்கு ஐஆர்டிஏஐ அனுமதி மறுத்துள்ளது.

இரு நிறுவனங்களும் இணைப்பு ஒப்பந்தத்திற்கான அமைப்பை மறுபடி மாற்றியமைக்கும் வேலை களில் ஈடுபட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹெச்டிஎப்சி லைப் மற்றும் மேக்ஸ் லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் இணைவதற்கு திட்டமிட்டன. மூன்று கட்டங் களாக இணைப்பை ஏற்படுத்த இரு நிறுவனங்களும் திட்டமிட் டன. அதாவது மேக்ஸ் லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தை முதலில் அதன் தாய் நிறுவனமான மேக்ஸ் பைனான்ஷியல் நிறுவனத் தோடு இணைப்பது, அதன் பிறகு ஹெச்டிஎப்சி லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தோடு இணைப்பது என திட்டமிடப்பட்டது. இப்படி இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டால் உருவாகும் புதிய நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகள் ஹெச்டிஎப்சி நிறுவனத்துக்கு இருக்கும்.

அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் இந்த இணைப்பு பற்றிய விவரங்களை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஐஆர்டிஏஐ அனுப்பியது. அதில் இரு நிறுவனங்களுக்கான ஒப்பந்த வரைவு காப்பீடு சட்டம் பிரிவு 35-ஐ மீறுவதாகவும் இன்ஷுரன்ஸ் நிறுவனம் இன்ஷுரன்ஸ் அல்லாத நிறுவனத்தோடு இணைய அனுமதிக்க முடியாது எனவும் மத்திய சட்ட அமைசக்கத்துக்கு எடுத்துரைத்தது. இது தொடர்பாக சட்ட பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்கத்திடம் ஐஆர்டிஏஐ கேட்டுக் கொண்டது. ஆனால் சட்ட அமைச்சகம் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியிடம் சட்ட பரிந்துரை அல்லது ஒப்புதலை பெறுமாறு ஐஆர்டிஏஐக்கு தெரிவித்தது. ஆனால் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி எந்தவொரு சட்ட ஒப்புதலையும் வழங்கவில்லை.

இந்த இணைப்புக்கு ஐஆர்டிஏஐ அனுமதி வழங்குவதற்கான காலவரையறை ஜுன் மாதத்தோடு முடிவடைகிறது. இருந்த போதிலும் நீதிமன்ற ஒப்புதல் பெற 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை காலவரையறை உள்ளது. இரு நிறுவனங்களும் இணைப்புக்கான புதிய ஒப்பந்த வரைவை இறுதி செய்தால் புதிய காலவரையறை பெற முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹெச்டிஎப்சி லைப் நிறுவனத்தோடு மேக்ஸ் லைப் நிறுவனம் இணையும் பட்சத்தில் உருவாகும் புதிய நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனமாக விளங்கும்.

``ஹெச்டிஎப்சி லைப் நிறுவனம் மட்டும் தனியாக பொதுப் பங்கு வெளியிடும் வழிகளை ஆராய்ந்து வருவதாக ஹெச்டிஎப்சி லைப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி தெரிவித்தார். மேலும் ஹெச்டிஎப்சி தனியாக பொதுப்பங்கு வெளியிடுவது சாத்தியமே. இணைப்பு முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து எதுவும் பெரிதாக நடந்துவிட வில்லை,’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT