செயில் நிறுவனத்தின் மூன்று துணை நிறுவனங்களின் பங்கு களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செயில் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான துர்காபூரில் உள்ள அலாய் எஃகு உருக்காலை, சேலம் மற்றும் பத்ராவதி எஃகு உருக்காலைகளின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துணை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என்று கூறியுள்ளது.
5 ஆண்டுகளாக நஷ்டம்
பங்குகளை தனியாருக்கு விற்கும் அனைத்து நடைமுறை களும் செயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. துர்காபூர் அலாய் எஃகு உருக் காலை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ரூ.400 கோடி முதலீடு செய்தபிறகும், கடந்த 10 ஆண்டு களில் பத்ராவதி உருக்காலை நஷ்டத்தில் இயங்குகிறது. அதே போல நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத் திட்டத்தின கீழ் சுமார் ரூ.2,200 கோடி முதலீடு செய்த பிறகும் சேலம் எஃகு உருக்காலை கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
செயின் நிறுவனத்தின் ஐந்து பெரிய ஆலைகளான பிலாய், பொக்காரோ, ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பரன்பூர் ஆலைகள், சேலத்தில் உள்ள சிறப்பு எஃகு உருக்காலை ஆகியவற்றில் ஒரே சமயத்தில் மிகப் பெரிய அளவில் விரிவாக்கத் திட்டத்தினை மேற் கொள்ள இருப்பதாக கூறப்பட் டுள்ளது.