இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் சம்பளம் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி பொதுவெளியில் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஆனால் சம்பள விஷயங்கள் குறித்து பொதுவெளியில் கருத்து கூறுவது தேவையற்றது என கோத்ரெஜ் குழும தலைவர் ஆதி கோத்ரெஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மேலும் கூறும்போது, சம்பளங்களில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது உண்மையே. இது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். இது குறித்து பொதுவெளியில் விவாதிக்கத் தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. நிறுவனங்கள், இயக்குநர் குழுக்கள் சம்பள விகிதங்களை முடிவு செய்கின்றன. இயக்குநர் குழு ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு மற்றவர்கள் எதற்காக புகார் கூற வேண்டும் என கேள்வி எழுப்பினார்.