கணக்கில் காட்டப்படாத வருமான விவரங்களை மின்னணு ஆவணம் (இ-ஃபைலிங்) மூலம் தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரும் நடவடிக்கையாக இதுவரை கணக்கில் காட்டப்படாமல் மறைத்துள்ள ரொக்கம், சொத்து விவரங்களை தாக்கல் செய்து அதற்குரிய வரியை செலுத்தும் வசதியை மத்திய அரசு ஒருமுறை வழங்கும் சலுகையாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில் கருப்புப் பணம் சார்ந்த விவரங்களை ஆவணங்கள் மூலம் தெரிவிக்க தயங்குவோர் அல்லது இ-ஃபைலிங் மூலம் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐடிஎஸ் எனப்படும் வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தின் கீழ் கணக்கை தாக்கல் செய்ய விரும்புவோர் டிஜிட்டல் கையெழுத்து மூலம் இ-ஃபைலிங் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
இவ்விதம் தங்களது கணக்கு விவரத்தைத் தாக்கல் செய்ய விரும்புவோர் அவர்கள் உள்ள பகுதியின் எல்லையில் வரும் வருமான வரித்துறை ஆணையர், முதன்மை ஆணையர் ஆகியோருக்கு இதைத் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்த விவரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை ஆணையர், சிபிசி, பெங்களூரு எனும் முகவரியில் உள்ள அலுவலகத்துக்கு இஃபைலிங் முறையில் அனுப்பி விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் எக்காரணத்தை முன்னிட்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிஎஸ் எனப்படும் இந்தத் திட்டமானது, இதுவரை வருமான வரி செலுத்தாமல் சேர்த்துள்ள சொத்து, ரொக்கம் பற்றிய விவரத்தை அளித்து அதற்குரிய வரியைச் செலுத்தி தண்டனை, அபராதத்திலிருந்து தப்பிக்க வகை செய்கிறது.
இத்திட்டத்தின்படி கணக்கை தாக்கல் செய்வோர் சொத்து மதிப்பில் 45 சதவீத தொகையை வரி, அபராதம் என செலுத்த வேண்டும்.
இவ்விதம் வரி செலுத்துவோர் செலுத்த வேண்டிய வரி, அபராதத் தொகையை சுலப தவணைகளில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதத் தொகை இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதிக்குள்ளும், 25 சதவீத தொகையை மார்ச் 31, 2017-க்குள்ளும், எஞ்சிய 50 சதவீதத் தொகையை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள்ளும் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.