மும்பை பங்குச்சந்தையில், 21,034 என்கிற புதிய உச்சத்தை சென்செக்ஸ் அடைந்தது. தேசிய பங்குச் சந்தையும் 31 புள்ளிகள் உயர்ந்து, 6, 252 புள்ளிகளில் முடிவடைந்தது. மருத்துவ துறை பங்குகளும், நுகர்வோர் பொருட்களின் பங்குகளும் உயர்ந்தன.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் தன்னுடைய இரண்டாவது நிதிக்கொள்கையை செவ்வாய்க்கிழமை அறிவித்தார். பல அனலிஸ்ட்கள் எதிர்பார்த்தைப் போலவே பணவீக்கம் அதிகமாக இருப்பதினால் ரெபோ விகிதத்தை (ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம்) 0.25 உயர்த்தியது. அதனால் இப்போது ரெபோ விகிதம் 7.50 சதவிகிதத்திலிருந்து 7.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே போல எம்.எஸ்.எஃப். (ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் கடன் வாங்குவதற்கான இன்னொரு வழிதான் இந்த எம்.எஸ்.எஃப்) விகிதம் 9 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக 7 முதல் 14 நாட்களுக்கு வாங்கும் தொகையின் அளவு அதிகரித்திருக்கிறது. அதாவது டெபாசிட் தொகையில் 0.25 சதவிகிதம் மட்டுமே கடன் வாங்க முடியும் என்கிற நிலையில் இருந்து டெபாசிட் தொகையில் 0.50 சதவிகிதம் வரைக்கும் கடன் வாங்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கிறது.
அதேபோல ரொக்க கையிருப்பு விகிதத்தில் (சி.ஆர்.ஆர்) எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. மொத்தத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மேலும், நடப்பு நிதி ஆண்டின் ஜி.டி.பி.(மொத்த உள்நாட்டு உற்பத்தியை) வளர்ச்சியை ஐந்து சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதற்கு முன்பு 5.5 சதவிகிதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் இந்தியாவின் வளர்ச்சி 5.3 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தோம். இப்போது அதில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை என்று கூறினார்.
தொழில்துறையினர் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ரெபோ உயர்வு எங்களை ஏமாற்றியதாக இ.இ.பி.சி.யின் தலைவர் அனுபம்ஷா தெரிவித்தார். மேலும் எம்.எஸ்.எஃப் விகிதம் குறைத்தது கூட பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்று ஆடைகளை ஏற்றுமதி செய்யும் சங்கத்தின் தலைவர் ஏ. சக்திவேல் கூறினார்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக மந்த நிலை இருக்கும்போது ரிசர்வ் வங்கி இன்னும் யோசித்திருக்கலாம். மேலும் இது எங்களுக்கும் நல்லதல்ல வாடிக்கையாளர்களுக்கும் நல்லதல்ல. இந்த வட்டி விகிதம் வளர்ச்சியைத் தடுக்கும் என்று டி.எல்.எஃப். நிறுவனத்தின் குழும செயல் இயக்குனர் ராஜிவ்தல்வார் தெரிவித்தார்.
பொதுவாக வட்டிவிகிதம் உயரும் போது பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைவதுதான் வாடிக்கையாக நடக்கும் ஆனால் வட்டிவிகிதம் உயர்ந்தபோதும் கூட பங்குச்சந்தைகள் உயர்ந்தன. வங்கி குறியீடுகளும் நல்ல ஏற்றத்தை கண்டது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 20929 புள்ளிகளில் முடிவடைந்து. திங்கட்கிழமையை விட 1.74 சதவிகிதம் அதிகமாகும்.
சென்செக்ஸின் உச்ச பட்ச புள்ளியான 21206 என்ற புள்ளியை வேகமாக சந்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.