வணிகம்

தொழில் முனைவோரை உருவாக்குவதில் ஒரு நிம்மதி - அஸ்பயர் கே. சுவாமிநாதன் பேட்டி

எம்.ரமேஷ்

தொழிலதிபராக உருவாக வேண்டும் என்ற லட்சியம் பலருக்கு இருந்தாலும் அதில் வெற்றி பெறுவோர் வெகு சிலரே. இதற்குக் காரணம் ஆசை. திறமை இருந்தாலும் அதை எவ்விதம் முன்னெடுத்துச் செல்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இத்தகைய உத்வேகம் கொண்டவர்களுக்கு வழிகாட்டி, அவர்கள் தொழில் தொடங்க ஊக்கம் அளிப்பதுதான் அஸ்பயர். தொழில்முனைவோருக்கு கலங்கரை விளக்கமாகத் திகழும் `அஸ்பயர்’ கே. சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான சந்திப்பிலிருந்து…

பூர்வீகம் கும்பகோணத்தை அடுத்த கிராமம். ஆனால் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் படிப்பு. அதன்பிறகு சிலகாலம் வேலை. 2000-ம் ஆண்டில் சொந்தத் தொழில். தொடர்ந்து பெங்களூர் ஐஐஎம்-மில் மேற்படிப்பு. கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி பிறகு இறுதியாக தொழில்முனைவோரை உருவாக்கும் பணியைத் தொடர்கிறேன்…

முதலில் ஆரம்பித்த நிறுவனம் என்ன?

தொழில் தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் 9-ம் வகுப்பு படிக்கும்போதே இருந்தது. அப்போது ரியல் எஸ்டேட் பிரபலமாகாத கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வீடு, நிலம் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து காட்டி விற்பனை செய்தேன். இணையதள சேவை அவ்வளவாக பிரபலமாக இல்லாத காலத்தில், பூகாய்கனி. காம் (pookaikani.com) என்ற இணையதளத்தைத் தொடங்கினேன். சென்னையில் உள்ளவர்கள் இந்த தளத்தில் தங்களுக்குத் தேவையானவற்றை பதிவு செய்தால், மறுநாள் காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி வீடுகளுக்கு டெலிவரி செய்தேன்.

ஏறக்குறைய 3,500 வாடிக்கை யா ளர்களை சம்பாதித்த நிலையில் நஷ்டத்தின் அளவு அதிகரிப்பதை உணர்ந்தேன். தகவல் தொழில்நுட்பத்தில் வலிமையாக இருந்தாலும் காய்கறிகளை வாங்கி அவற்றை சுத்தப்படுத்தி விநியோ கிக்கும் துறையில் மிகவும் வலிமையாக இல்லை என்பதை உணர்ந்தேன். நஷ்டம் மேலும் அதிகரிக்காமலிருக்க அந்தத் தொழிலை அப்படியே விட்டுவிட்டேன். எனக்கு நன்கு பரிச்சயமான தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைய முடிவெடுத்தேன்.

ஆன்லைன் மூலமாக அனைவருக்கும் கல்வியை ஏற்படுத்த முடிவு செய்து இகுருகூள்.காம் (eGurucool.com) என்ற இணையதளம் 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக 1.20 கோடி டாலர் அளவுக்கு வென்ச்சர் கேபிடல் கிடைத்தது இந்நிறுவனத்துக்குத்தான். இதைத்தான் 2001-ம் ஆண்டு என்ஐஐடி வாங்கியது. இதன் பிறகு அனைத்துத் தரப்பினருக்கும் உயர்ந்த கல்வியை குறைந்த கட்டணத்தில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் கல்வியை அளிக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது அஸ்பயர் கல்வி நிறுவனம்.

அஸ்பயர் என்ற பெயர் மிகவும் பிரபலம். இந்தப் பெயரைத் தேர்வு செய்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா?

என்ஐஐடி கம்ப்யூட்டர் கல்வி பயிற்சி மையத்தின் அங்கமாகத் திகழ்ந்த என்ஐஎஸ் மையத்தில் பணியாற்றியபோது, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக இருந்த காலம். அப்போது அவர் கிராமத்து இளைஞர்கள் பொறியியல் வல்லுநராக உருவாக வேண்டும் என்ற அஸ்பிரேஷன் இருந்தாலும் அது சாத்தியமாகாது இல்லையா? என்று கேள்வியெழுப்பினார். இது என்னுள் ஒரு பொறியை ஏற்படுத்தியது. இதை ஏன் நாம் செயல்படுத்தக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாட்டில் உருவானதுதான் அஸ்பயர் கல்வி நிறுவனம்.

இந்த பயிற்சி மையத்துக்கு எந்த அளவு வரவேற்பு இருந்தது?

நாடு முழுவதும் இந்தப் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சேர்ந்தனர். காரணம் கட்டணம் மிகக் குறைவாக இருந்ததுதான். முதல் ஆண்டு முடிவில் அகில இந்திய பொறியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வில் முதல் நூறு இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் 23 அஸ்பயர் மாணவர்கள் இருந்தனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரு மடங்கானது. மூன்றாமாண்டில் 100 பேர் பட்டியலில் 93 மாணவர்கள் அஸ்பயர் மையத்தில் பயின்றவர்களாக இருந்தனர். இதனால் மையத்தின் புகழ் நாடெங்கும் பரவியது. ஆனால் சோதனை வேறு ரூபத்தில் வந்தது…

பயிற்சி மையத்தில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்த நிலையில் சோதனைக் காலம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இதை ஈடுகட்டும் விதமாக அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறையை பின்பற்றினோம். அதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. 7 ஆண்டுகளில் இந்நிறுவனம் 63 இடங்களில் கிளை பரப்பியிருந்தது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 50 கோடியாக உயர்ந்தது.

நிறுவனங்களைத் தொடங்குவது அதை சிறப்பாகச் செயல்படுத்துவது பிறகு விற்பது என்றே செய்திருக்கிறீர்களே? இப்போது ஆரம்பித்திருக்கும் startup2scaleup.com வளர்ந்த பிறகு மற்ற நிறுவனங்கள் போல விற்றுவிடுவீர்களா?

தமிழக அரசின் 2023 தொலை நோக்கு அறிக்கை வெளியான போது அதிலிருந்த விஷயங்கள் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. தொழில் முனைவோரை உருவாக்கினால் என்ன என்ற சிந்த னையின் விளைவாக உருவானது தான் ஸ்டார்ட்அப்2ஸ்கேல்அப். முந்தைய தொழில்களில் ஒரு கட்டத்துக்கு மேல் வளர்ச்சி இல்லை என்று தோன்றியது. ஆனால் தொழில் முனைவோர் உருவாக்கத்தில் அப்படியில்லை. தினசரி புதிது புதிதான அனுபவம் கொண்டவர்களை சந்தித்து அவர்களது சிந்தனைக்கு புத்துயிரூட்டி தொழிலாக உருவகப்படுத்துவதில் நிம்மதி கிடைக்கிறது.

அரசின் உதவியில்லாமல் தனிப்பட்ட முறையில் இதைச் செயல்படுத்த முடியுமா?

10 பேரை உருவாக்கினால் அவர்களால் 100 பேருக்கு வேலை கிடைக்கும். இப்படி படிப்படியாக செயல்படுத்தும்போது ஒட்டுமொத்த இலக்கில் ஒரு சதவீத பங்களிப்பு என்னுடையதாக இருந்தால் அதுவே போதும்…

எத்தனை பேரை உருவாக்கியுள்ளீர்கள்?

தொழில்முனைவோராக ஆசைப்படு பவர்களது சிந்தனை சாத்தியமா என்று ஆராய்ந்து அந்நிறுவனத்தில் குறைந்தபட்ச பங்குதாரராக மாறி அந்நிறுவனத்தை வளர்த்து அதை பெரிய அளவுக்கு உருவாக்குவதுதான் இப்போதைய வேலை. அந்த வகையில் 7 இளை ஞர்களின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து அதில் 6 பேர் தொழில் தொடங்கியுள்ளனர். மற்றொ ருவர் முயற்சி சோதனை அளவில் உள்ளது.

ramesh.m@thehindutamil.co.in

SCROLL FOR NEXT