இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ராயல் என்பீல்ட் நிறுவனம் தனது தயாரிப்புகளை லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான இந்நிறுவனம் சர்வதேச அளவில் ஏற்றுமதியை அதிகரிக்க தங்கள் தயாரிப்புகளுக்கு அதிக கிராக்கி உள்ள நாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள தாக நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் லால் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் புதிய மாடலான 535 சிசி திறன் கொண்ட கான்டினென்டல் ஜிடி மோட்டார் சைக்கிளுக்கு சர்வதேச அளவில் மிகுந்த கிராக்கி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
250 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளுக்கும் 750 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளுக்கும் இடைப்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இந்த பிரிவில் ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என கருதுகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
இத்தகைய இடைப்பட்ட பிரிவு மோட்டார் சைக்கிளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. எனவே இத்தகைய நாடுகளில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
சர்வதேச அளவில் இத்தகைய பிரிவு மோட்டார் சைக்கிளின் தேவை 8 லட்சமாகும். இந்தியாவில் 2 லட்சம் வாகனங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள இரண்டு உற்பத்தி ஆலைகள் மூலம் வாகனங்களைத் தயாரித்து வரும் என்பீல்ட் நிறுவனத்தின் ஏற்றுமதி அளவு வெறும் 3 சதவீதம் மட்டுமே. இந்நிறுவனம் ஆண்டுக்கு 1.75 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கிறது.
இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 2.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று லால் கூறினார்.
இந்நிறுவனம் புல்லட், கிளாசிக், தண்டர்பேர்ட் என்ற பெயர்களில் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கிறது.
இவற்றில் சில மாடல்களுக்கு 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. நிறுவன விற்பனையாளர்களின் எண்ணிக்கையை ஆண்டு இறுதிக்குள் 300 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக லால் கூறினார்.