வணிகம்

ஜனவரி 23-ல் 2-ஜி அலைக்கற்றை ஏலம்

செய்திப்பிரிவு

2-ஜி அலைக்கற்றை ஏலம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கும் என்று தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

1800 மெஹாஹெர்ட்ஸ் மற்றும் 900 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளதாக வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நிறுவனங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜனவரி 4-ம் தேதியாகும்.

விண்ணப்பங்களை பரிசீலிக்கும் காலம் 60 நாளிலிருந்து 42 நாள்களாகக் குறைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது ஏலம் இதுவாகும். நிறுவனங்களுடனான ஏலத்துக்கு முந்தைய ஆலோசனை டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும். ஏலம் தொடர்பான விளக்கங்களை நிறுவனங்கள் கேட்டுப் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர் 28-ம் தேதியாகும்.

மத்திய அமைச்சரவை குழு அலைக்கற்றைக்கான அடிப்படை விலையை இறுதி செய்த நாளிலிருந்து 60 நாள்களில் ஏல நடைமுறை தொடங்கும்.

அமைச்சரவை தீர்மானம் செய்த 15 நாள்களுக்குள் அலைக்கற்றை கோரி வரும் கேட்பு விண்ணப்ப மனுக்களை (என்ஐஏ) வெளியிட வேண்டும். ஆனால் அமைச்சரவை தீர்மானம் செய்த 3 நாள்களில் கேட்பு விண்ணப்ப மனுக்களை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1800 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 900 மெஹாஹெர்ட்ஸுக்கான விலையாக ரூ. 48,685 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் அலைக்கற்றை விற்பனை மூலம் ரூ. 40,874 கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அலைக்கற்றை ஏல விற்பனை மற்றும் வர்த்தக மொபைல் சேவை மூலம் இதைத் திரட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணத்தை 2 ஆண்டுகளில் செலுத்தலாம். இது 10 தவணைகளில் வசூலிக்கப்படும். அலைக்கற்றை விற்பனை அரசு எதிர்பார்த்ததைப் போல வருவாய் தரும்பட்சத்தில் முதல் தவணையில் அரசுக்கு ரூ. 15,200 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய நிறுவனங்ள் குறைந்தபட்சம் 25 வட்டாரங்களில் அதாவது 200 கிலோஹெர்ட் அலைவரிசைக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இத்தொழிலி்ல் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறைந்தபட்சம் 3 வட்டாரங்களில் நிறுவ விண்ணப்பிக்கலாம்.

வோடபோன், ஏர்டெல், லூப் மொபைல் ஆகிய நிறுவனங்கள் புதிய நிறுவனங்களாகக் கருதப்பட்டு அவை பங்கேற்க அனுமதிக்கப்படும். இவை 900 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கோரி விண்ணப்பிக்கலாம். 900 மெகாஹெர்ட்ஸ் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 மெஹாஹெர்ட்ஸ் அலைவரிசையை நிர்வகிப்பவை யாக இருக்க வேண்டும்.

முதல் முறையாக விண்ணப்பம் கோரும் மனுவில் அலைக்கற்றை பகிர்வு, நிறுவனங்கள் இணைப்பு, நிறுவனங்களை வாங்குவது, அலைக்கற்றை வர்த்தகம் தொடர்பான அனைத்து வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளது. ஏல விற்பனை மூலம் அலைக்கற்றை பெறும் நிறுவனங்கள் மொபைல் சேவைக்கான அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT