தமிழகத்தில் இருந்து மாலத் தீவுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டில் சிறப்புக் கண்காட்சிக்கு இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எப்ஐஇஓ) ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சியில் அரங்குகள் அமைக்க மானியமும், தேவை யான உதவிகளையும் ஆணையம் செய்து தரும் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தென் மண்டல தலைவர் ஏ.சக்திவேல் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மாலத்தீவுகள் நாடுடன் வர்த்தக உறவில் முக்கிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ. 1,032 கோடியாக இருந்தது. இது 2015-16-ம் ஆண்டில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.1,174 கோடியாக உள்ளது.
இந்தியாவில் இருந்து மாலத் தீவுகள் நாட்டிற்கு விவசாயப் பொருட்கள், சர்க்கரை, பழங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் தமிழக ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும், மாலத்தீவு நாட்டின் வர்த்த கர்கள் மற்றும் பொது மக்களை நேரில் சந்தித்து தங்களது தயாரிப் புகளை விற்பனை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றும் சக்திவேல் கூறினார்.
ஏப்ரல் 27-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை மூன்றுநாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி யில் அரங்கு அமைக்க ரூ.1.80 லட்சம் செலவாகும். ஆனால் மத்திய அரசு அளிக்கும் மானிய உதவி காரணமாக வர்த்தகர்கள் ரூ.39,500 செலவு செய்தாலே போதுமானது. இதில் பங்கு பெற விரும்பும் ஏற்றுமதியாளர்கள் selvanayagi@fieo.org என்ற இ-மெயில் முகவரி அல்லது 044-28497744 என்கிற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.