பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி அஜய் தியாகி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஹிமாச்சல பிரதேச பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் (1984) அதிகாரி ஆவார். தற்போது பொருளாதார விவகார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு `செபி’ தலைவராக இவர் இருப்பார்.
தற்போது `செபி’ தலைவராக இருக்கும் யூ.கே.சின்ஹா வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். கடந்த 2011-ம் ஆண்டு தலைவராக யூ.கே.சின்ஹா நியமனம் செய்யப் பட்டார். 2014-ம் ஆண்டு இரு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பும், 2016-ம் ஆண்டு ஓர் ஆண்டு பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
இவரது மாத சம்பளம் 4.5 லட்சம் ரூபாயாகும். `செபி’ தலைவர் பதவிக்கு 50-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. மின் துறை செயலாளர் பி.கே.புஜாரி உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந் தனர். பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் `செபி’ தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்னும் யூகத் துக்கு இவரது நியமனம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கபட்டிருக் கிறது.
மிகப்பெரிய பொறுப்பு: தியாகி
`செபி’ தலைவர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. இந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் தியாகி தெரிவித்தார்.
எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர். நிதி அமைச்சகத்தில் இணைவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தார். தவிர எண்ணெய் எரிவாயு துறையிலும் பணியாற்றி இருக்கிறார். ஹிமாச்சல பிரதேச மாநில அரசில் மின்சாரம், வருவாய், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றியவர். சிறிது காலம் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவிலும் இருந்தார்.
1995-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை டி.ஆர்.மேத்தா செபியின் தலைவராக நீண்ட காலத்துக்கு இருந்தார். அவருக்கு அடுத்து யூ.கே.சின்ஹா அதிக காலம் இந்த பதவியில் இருந்தவர் ஆவார்.