வணிகம்

பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வு: அரசுக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி வருமானம்

பிடிஐ

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறுகிய காலத்தில் மத்திய அரசு மூன்று முறை உயர்த்தியது. இதன் வரி உயர்வு காரணமாக நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு 10,000 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பங்கு விலக்கல் மற்றும் நேரடி வரி வசூல் குறைவாக இருக்கும் சூழலில் நிதிப்பற்றாக்குறையை குறைக்க இந்த தொகை பயன்படும்.

சனிக்கிழமை அன்று பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 37 பைசாவும், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தபட்டது. இந்த வரி உயர்வினால் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லரை விற்பனை விலையில் எந்த உயர்வும் இருக்காது. தற்போது பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 7.36 ரூபாயிலிருந்து 7.73 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 5.83 ரூபாயில் இருந்து 7.83 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

கடந்த இரு மாதங்களில் மூன்று முறை உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2014 நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 7 முறை பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.மத்திய அரசு உற்பத்தி வரியை உயர்த்தாமல் இருந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10.02 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 9.97 ரூபாயும் குறைவாக இருந்திருக்கும்.

நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை ஜிடிபியில் 3.9 சதவீதமாக கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் 69,000 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இதுவரை 12,700 கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்திருக்கிறது.

நிதி அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, பங்கு விலக்கல் மூலம் சுமார் 50,000 கோடி ரூபாய் பற்றாக்குறையும், நேரடி வரியின் மூலம் 30,000 முதல் 40,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் மறைமுக வரி வருமானம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மறைமுக வரி வருமானம் 34 சதவீதம் உயர்ந்து 4.38 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.

பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்க நிதி அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஏற்கெனவே 65,896 கோடி ரூபாயை டிவிடெண்டாக மத்திய அரசு பெற்றுவிட்டது.

நவம்பர் மாத இறுதிவரை 4.83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. நிதிப்பற்றாக்குறைக்கு இலக்கு நிர்ணயம் செய்த தொகையில் 87 சதவீதம் எட்டப்பட்டுவிட்டது. ஆனால் கடந்த வருடம் இதே காலத் தில் 98.9 சதவீதம் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT