விஜய் மல்லையாவின் ரூ. 6,000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுபிடித் துள்ளது. இந்த சொத்துகளை முடக்கவும் திட்டமிட்டுள்ளது. வங்கி கடன் மோசடி வழக்கு மீது புதிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகள், மல்லையா மற்றும் அவர் குடும்பத்தின் வசம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இந்த சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மல்லையா தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேறு சிலர் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
இது தொடர்பாக வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை ஏற்கெனவே விரிவான கடிதம் எழுதி இருக் கிறது. இதற்கிடையே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவை விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கை யிலும் அமலாக்கத் துறை இறங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரூ.1,411 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய் தது. ஐடிபிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் நேரில் ஆஜராக அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. சர்வதேச பிடியாணை, பாஸ்போர்ட் முடக்கம் என அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன.
வங்கியில் கடன் வாங்கிய தொகையை வேறு வழிகளில் பயன்படுத்தியதாக விஜய்மல்லையா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த மார்ச் 2-ம் தேதி இந்தியாவை விட்டு மல்லையா வெளியேறினார். வங்கிக்கடன் மோசடி வழக்கு தவிர சில காசோலை மோசடி வழக்குகளும் உள்ளன. 2012-ம் ஆண்டு போடப்பட்ட ஒரு வழக்கில் டெல்லி நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வர இயலாத பிடியாணை பிறப்பித்தது.