தொழில் நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அளவு 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளன.
மத்திய மற்றும் மாநில அரசு களுக்கு போதிய வருமானத்தை ஈட்டித் தராத எந்தவிதமான வரிச் சீர்திருத்தமும் வெற்றி பெறாது. இதைக் கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட வேண்டும் என்று அசோசேம் செயலர் ஜெனரல் டி.எஸ். ரவாத் தெரிவித்துள்ளார்.
தொழில் துறையினரின் எதிர்பார்ப்பின்படி ஜிஎஸ்டி அளவானது 17 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த அளவைக் காட்டிலும் அதிகமாக விதிக்கப்பட்டால் உற்பத்தியை பாதிக்கும், பணவீக்கத்துக்கு வழி வகுக்கும். மேலும் சேவைத்துறை கடுமை யான பாதிப்புக்குள்ளாகும் என்று ரவாத் சுட்டிக் காட்டினார்.