ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஒரு சதவீத பங்குகளை அலிபாபா நிறுவனத்திடம் விற்றது. இதன் மதிப்பு ரூ.275 கோடி ஆகும். இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு ரூ.27,500 கோடியாக (400 கோடி டாலர்) இருக்கிறது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்தது. அப்போது ரிலையன்ஸ் கேபிடல் ஒரு சதவீத பங்குகளை ரூ.10 கோடிக்கு வாங்கியது.
ரிலையன்ஸ் கேபிடல் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 2010-ம் ஆண்டு 10 கோடி முதலீடு செய்தது. கடந்த ஆண்டு ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேடிஎம் மற்றும் பேடிஎம் மால் என இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. பேடிஎம் என்பது வாலட் நிறுவனமாகவும், பேடிஎம் மால் என்பது இ-காமர்ஸ் நிறுவன மாகவும் செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் கேபிடல் முதலீடு செய்த ஒன் 97 நிறுவனம், பேடிஎம் மற்றும் பேடிஎம் மால் ஆகிய இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டதால் இரு நிறுவனங்களிலும் ரிலை யன்ஸ் கேபிடலுக்கு ஒரு சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டது. இப்போது பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை மட்டுமே ரிலையன்ஸ் கேபிடல் விற்றுள்ளது. பேடிஎம் மால் நிறுவனத்தின் ஒரு சதவீத பங்குகள் ரிலையன்ஸ் கேபிடல் வசம் இருக்கிறது.
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 41 சதவீத பங்குகளை அலிபாபா வைத்துள்ளது.