இன்ஜினீயர்ஸ் இண்டியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு, பொது நிறுவனங்களின் பங்கு விலக்கலுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ. 500 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் துறை செயலர் ரவி மாத்தூர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இன்ஜினீயர்ஸ் இண்டியா நிறுவனத்தின் (ஈஐஎல்) 10 சதவீத பங்குகளை தொடர் பொது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய பொதுப் பங்கு விலக்கலுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ரூ. 500 கோடி நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கிறோம். நிறுவனங்களின் பதிவாளரிடம் இருந்து இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், இப்பங்கு விற்பனைக்கான காலவரையறையை வெள்ளிக்கிழமை வெளியிடுவோம், என்றார்.
பொதுப் பங்கு விலக்கல் துறை ஏற்கெனவே, இன்ஜினீயர்ஸ் இண்டியா நிறுவனத் தின் பங்குகளில் முதலீடு செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் அதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.பங்கு விலக்கலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட அமைச் சரவைக் குழுவுக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகிக்கிறார்.
வியாழக்கிழமை நிறைவடைந்த மும்பை பங்குச் சந்தையில் ஈஐஎல் பங்கு 3.35 சதவீதம் சரிந்து ரூ.146.65-க்கு விற்பனையானது. ஈஐஎல்-லின் மூன்று கோடியே 36 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், 5 சதவீத பங்குகளை அந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது. மினி ரத்னா அந்தஸ்து பெற்ற ஈஐஎல்-லில் 80.4 சதவீத பங்குகளை மத்திய அரசு கைவசம் வைத்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு 10 சதவீத பங்குகளை தொடர் பொது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 40 ஆயிரம் கோடியைத் திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இதுவரை பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ. 3,000 கோடி திரட்டப்பட்டுள்ளது