நடப்பு ஆண்டில் புதியதாக 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. அதே சமயத்தில் 10 முதல் 30 சதவீதம் வரையும் சம்பள உயர்வு இருக்கும் என்று மனிதவளத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 2015-ம் ஆண்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவானது. அதேபோல இந்த ஆண்டிலும் புதிய வேலை வாய்ப்புகள் அதிக ளவில் உருவாகும். சாதகமான பொருளாதார சூழ்நிலை, தொழில் நுட்பம், சில்லரை வர்த்தகம் உள் ளிட்ட புதிய தொழில்முனை வோர்கள் உருவாக்கம் ஆகிய காரணங்களால் வேலைவாய்ப்புகள் உருவாகும். முறைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என ``மை ஹைரிங் கிளம் டாட் காம்’’ மற்றும் ``ஜாப் போர்டல் டாட் காம்’’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
அந்நிய நிறுவனங்கள் வருகை
தவிர, உற்பத்தி துறையில் அந்நிய நிறுவனங்கள் வர இருக்கின்றன. மேலும் சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு உயர்த்தப்பட்டுள்ளதால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் சம்பள உயர்வு மற்றும் போனஸ் ஆகியவை இரட்டை இலக்கத்தில் இந்த வருடம் இருக்கும் என்றும் இந்த பிரிவு நிறுவனங்கள் கணித்திருக்கின்றன.
இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வருடம் அதிக பணியாளர்களை எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 12 துறைகளில் இருந்து 21 நகரங்களை சேர்ந்த 5,480 நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1,614 நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் பணியாளர்களை எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறது.
தவிர அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவும், இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி காரணமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று டைம்ஸ் ஜாப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி விவேக் மதுகர் தெரிவித்தார்.
சம்பள உயர்வு
இந்த வருடம் ஏழாவது சம்பள கமிஷன் அமல்படுத்துவதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும். இதன் காரணமாக தனியார் துறையிலும் அதிக சம்பள உயர்வு கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். சராசரியாக 12 முதல் 14 சதவீதம் வரை சம்பள உயர்வும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு 25-30 சதவீதம் சம்பள உயர்வும் இருக்க கூடும் என குளோபல் ஹண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் கோயல் தெரிவித்தார்.
அனைத்து துறையிலும் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த ஆண்டு இது என்று நாக்ரி டாட் காம் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி வி.சுரேஷ் தெரிவித்தார்.
ஐடி துறையில் 2.7 லட்சம் வேலை வாய்ப்புகளும், இ-காமர்ஸ் துறையில் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளும் இந்த வருடம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிஜிட்டல் மார்கெட்டிங் பிரிவில் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளும் வங்கி மற்றும் நிதிசார்ந்த பிரிவுகளில் 3 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும். சில்லரை வர்த்தகம் மற்றும் ஆட்டோமொபைல் துறையிலும் கணிசமாக வேலை வாய்ப்புகள் உருவாகும்.