வணிகம்

ரூ.3 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிவர்த்தனைக்கு அதே அளவு தொகை அபராதம் விதிக்கப்படும்: வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கறுப்புப் பணத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக 3 லட்ச ரூபாய்க்கு மேலான ரொக்க பரிவர்த்தனைக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதிக்கு மேல் 3 லட்ச ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பணத்தை வாங்குபவர் இதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். நீங்கள் 4 லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்தால் 4 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண் டும். அதேபோல 50 லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்தால் கூட அதே அளவு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இந்த பணத்தைப் பெறுபவர் அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

ஒருவேளை உயர்ரக வாட்ச் ஒன்றை ரொக்கமாக ஒருவர் வாங்கினால் கடைக்காரர் அந்த அபராதத்தை செலுத்த வேண்டும். இந்த அபராதம் காரணமாக மக்கள் ரொக்க பரிவர்த்தனை செய்வது குறையும். பண மதிப்பு நீக்கம் காரணமாக பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் வெளியே வந்துள்ளது. அதனை தொடர்ந்து மேலும் கறுப்புப் பணம் பதுங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக அனைத்து ரொக்க பரிவர்த்தனை களையும் அரசு கண்காணித்து வருகிறது.

கறுப்புப் பணம் வைத்திருப் பவர்கள் பெரும்பாலும் வெளிநாடு களுக்கு சுற்றுலா செல்வது, சொகுசு கார்கள், விலை உயர்ந்த வாட்ச்கள் வாங்குவது மற்றும் நகைகள் வாங்கி ரொக்கமாக செலவு செய்கின்றனர். இந்த தடை மூலம் இதுபோல எந்த விதமான பரிவர்த்தனையும் செய்ய முடியாது. அதனால் கறுப்புப் பணம் உருவாவதை தடுக்க முடியும். அதேபோல இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் பான் எண்ணை வழங்க வேண்டும் என்ற விதி இப்போதும் தொடர்கிறது என்று ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய பட்ஜெட் உரையில் எந்த தனிநபரும் 3 லட்ச ரூபாய் அல்லது அதற்கு மேலான பணத்தை ஒரு நாளில் ஒரு முறையோ பல முறையோ தனிநபரிடம் இருந்து வாங்க முடியாது. அதே சமயம் வங்கிகள், அரசு, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விதி பொருந்தாது என்றும் கூறினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான முதலமைச் சர்கள் குழு, 50,000 ரூபாய்க்கு மேலான ரொக்க பரிவர்த்தனையை தடைசெய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT