எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு நிறைய சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான (ஓ.இ.சி.டி) அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தாலும் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இருக்கும். 8 சதவீதம் மற்றும் அதற்கும் மேலாக எப்படி வளர்வது என்பதுதான் இப்போதைய கேள்விக்குறி என்று ஓ.இ.சி.டியின் தலைமை பொருளாதார வல்லுநர் கேத்தரின் மன் தெரிவித்தார். பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு இந்த மையம் செயல்படுகிறது. அடிப்படையில் நிறைய சீர்திருத்தங்கள் கொண்டுவரவில்லை என்றால் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவதே கடினம் என்றும் தெரிவித்தார். இப்போதைக்கு கட்டுமானம், தொழிலாளர் சட்டங்கள், தொழில் தொடங்குவதில் பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அடுத்த நிதி ஆண்டுக்கான வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் என்று ஏற்கெனவே ஓ.இ.சி.டி. கணித்திருந்தது. நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் (நுகர்வோர் பணவீக்கம்) 7.1 சதவீதமாகவும், அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் 6.3 மற்றும் 6 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்திருக்கிறது. மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது 7 சதவீதம் என்பதே அதிகம்தான் என்று கேத்தரின் மன் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் பணவீக்கத்தை குறைக்கும் என்றார். அதிக பணவீக்கம், அதிக நிதிப்பற்றாக்குறை, மின்சாரம் மற்று உரத்துக்கு அதிக மானியம் கொடுப்பது ஆகிய காரணமாக முக்கியமான வரி சீர்த்திருத்தங்கள் கொண்டுவருவதில் தாமதம் அடைகின்றது.
இதனால் பிஸினஸ் செய்வதற்கான சூழ்நிலை எளிமையாகாமல் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. இப்போதைக்கு குறைவான பணவீக்கமும், குறைவான பற்றாக்குறையும் அவசியமாகும் என்றும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த வேண்டும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.