வர்த்தக ரீதியாக நிலவுக்கு பயணம் செல்லும் திட்டங்களில் முதன் முதலில் அமெரிக்க வாழ் இந்தியரின் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘மூன் எக்ஸ்பிரஸ்’ என்கிற இந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவின் விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன் இணை நிறுவனர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இந்த விண்கலம் 2017ல் நிலவுக்குப் பயணம் மேற்கொள்கிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு கொள்கைகளில் இந்த முடிவு முக்கியமானது. இதன் மூலம் மூன் எக்ஸ்பிரஸின் ரோபாட்டிக் விண்கலம் நிலாவில் தரையிறக்க உள்ளதாகவும் நிறுவனம் வெளி யிட்ட செய்தியில் தெரிவித்துள் ளது.
பூமியின் சுற்று வட்ட பாதைக்கு அப்பால் இதுவரை தனியார் நிறுவனங்கள் விண் வெளி பயணங்கள் மேற்கொண்ட தில்லை. அரசு நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன.
‘மூன் எஸ்பிரஸ்க்கு வானத்தில் எல்லையேயில்லை, விண்வெளி பயணம் என்பது எங்களது பாதை தான், ஆனால் அடுத்த தலை முறைக்கு எல்லையில்லா வாய்ப்பு களை உருவாக்கிக் கொடுப்பதாக இது அமையும் என்று மூன் எக்ஸ்பிரஸின் இணை நிறுவனர் நவீன் ஜெயின் கூறியுள்ளார். இந்த பயணத்தில் கற்பனையில் உள்ள நிலவின் உலோகங்கள், நிலவின் பாறைகளோடு திரும்ப உள்ளோம் என்றும் குறிப்பிட்டார். விண்வெளி தொழில்நுட்பத்தில் திறமை கொண்ட டாக்டர் பாப் ரிச்சர்ட்ஸ், மற்றும் நவீன் ஜெயின் ஆகிய இருவரும் 2010ல் விண்வெளி ஆய்வுக்காக இந்த நிறுவனத்தை தொடங்கினர்.
இந்த ‘மூன் எஸ்பிரஸ் 2017’ பயணத்துக்கு அமெரிக்க அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. பூமியின் வட்டப் பாதைக்கு அப்பால் செல்லும் வர்த்தக நீதியான தனியார் பயணமாக இது இருக்கும் என்று ரிச்சர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. வளங்கள் விரிவடைகிறது, இது அனைத்து மக்களும் பயன்தரக்கூடியது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனம் 2017ல் வர்த்தக ரீதியான பயணம் செய்ய அமெரிக்காவின் மத்திய விமான துறை நிர்வாகத்துக்கு 2016 ஏப்ரல் 8 ஆம் தேதி விண்ணப்பம் செய்திருந்தது. வர்த்தக ரீதியான விண்வெளி செயல்பாடுகளில் இது முக்கியமான மைல்கல் என்று வான் அறக்கட்டளை (ஸ்பேஸ் பவுண்டேசன்) தலைமைச் செயல் அதிகாரி எலியர் பால்கம் குறிப்பிட்டுள்ளார்.