வணிகம்

நாட்டின் நிதிப் பற்றாக்குறை 83 சதவீதம்

செய்திப்பிரிவு

நாட்டின் நிதிப் பற்றாக்குறை செப்டம்பர் மாத்துடன் முடிவடைந்த காலத்தில் 82.6 சதவீத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. பட்ஜெட் மதிப்பீட்டின்படி பற்றாக்குறை ரூ. 4.38 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

2013-14-ம் நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டின்படி பற்றாக்குறை செப்டம்பர் இறுதியில் 76 சதவீத அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் அரசின் வரி வருவாய் ரூ. 3.23 லட்சம் கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 33.1 சதவீதமாகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் அரசின் செலவு ரூ. 8.62 லட்சம் கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 48 சதவீதமாகும்.

மொத்த செலவில் திட்டம் சார்ந்த செலவுகள் ரூ. 2.46 லட்சம் கோடியாகும். திட்டம் சாரா செலவு ரூ. 6.15 லட்சம் கோடியாகும். அரசின் வருமானம் ரூ. 4.17 லட்சம் கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 35.1 சதவீத அளவுக்கு உள்ளது.

மொத்த வருமானம் (வரி மற்றும் பிற வருவாய்) கடந்த ஆறு மாதத்தில் ரூ. 4.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் முழு ஆண்டுக்கான பற்றாக்குறையில் 91.2 சதவீதமாகும்.

பற்றாக்குறை எதிர்பார்க்கப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் ரூ. 5.08 லட்சம் கோடி அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டில் ஒட்டு மொத்த பற்றாக்குறை ரூ. 5.31 லட்சமாக இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.1 சதவீதமாகும்.

பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திட்டம் சாரா செலவுகளை 10 சதவீத அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் விமான பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்கு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பணியிடங்களை நிரப்பவும் தாற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2016-17-ம் நிதி ஆண்டில் நாட்டின் பற்றாக்குறையை 3 சதவீத அளவுக்குக் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதிக அளவில் வரி திருப்பியளித்ததால் பற்றாக்குறை அதிகரிப்பு

நடப்பு நிதி ஆண்டில் அதிக அளவில் வரி திருப்பியளித்ததால் (டாக்ஸ் ரீபண்ட்) பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் எதிர்பார்ப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 83 சதவீத பற்றாக்குறை அரையாண்டிலேயே எட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அதிக அளவில் வரி திரும்ப அளிக்கப்பட்டதுதான் என்றார். திருப்பி அளிக்க வேண்டிய வரி நிலுவைத் தொகை ரூ. 1.20 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டார். இதனால் மறைமுக வரி விதிப்புக்கான இலக்கை எட்டுவது மிகப் பெரும் சவலாக இருக்கும் என்றார் அவர்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 3.23 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் ரூ. 80,850 கோடி தொகை டாக்ஸ் ரீபண்டாக அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT