வணிகம்

சீர்திருத்தங்களை எதிர்நோக்கும் தொழில்துறை

செய்திப்பிரிவு

இந்திய தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், லோக்பால் மசோதா ஆகியன நிறைவேற்றப்பட்டாலும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), நேரடி வரி விதிப்பு வரைவு (டிடிசி) காப்பீடு மசோதா ஆகியன நிறைவேற்றப்பட வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி), கட்டமைப்பு கட்டுப்பாடு, தொழில் புரிவதற்கான உகந்த சூழ்நிலை ஏற்படுத்துவதற்குத் தேவையான சீர்திருத்தம் ஆகியவற்றை தொழில்துறை எதிர்பார்ப்பதாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அரசு உற்பத்தி மண்டலங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அன்னிய நேரடி முதலீடுகளை தொலைத் தொடர்பு, ராணுவம் ஆகியவற்றில் ஈர்க்க முடிவு செய்தது. அதேசமயம் தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இரட்டை வரி விதிப்பு முறையைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஜிஏஏஆர் மிகுந்த தெளிவோடு கொண்டு வரப்பட்டதாகவும், அத்துடன் துறைமுக விதிமுறைகள், விலை மாற்றல் ஆகிய நடவடிக்கைகள் தொழில் துறையினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. நேரடி வரிவிதிப்பு மசோதா அமலுக்கு வருவதன் மூலம் துணை நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலிருந்து தப்பிப்பது தவிர்க்கப்படும் என்று தொழில்துறையினர் கருதுகின்றனர்.

தொழில்துறைக்கென மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதிர்பார்ப்புக்கும் குறைவாக உள்ளதாக அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்தார். குறித்த காலத்திற்குள் தொழில்துறை மேம்பாட்டுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் எவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று ஃபிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத் துவதற்காக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது தொழில்துறைக்கு பாதிப்பாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக வட்டி மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததோடு வளர்ச்சியையும் பாதித்துள்ளது. குறிப்பாக பணவீக்க உயர்வு தொழில்துறையை வெகுவாகப் பாதித்துள்ளது.

நிர்வாக ரீதியிலான அதிகார வர்க்கத்தினர் எடுக்கும் முடிவுகள் குறித்த கால வரையறையுடன் இருக்க வேண்டும் என்று கோபாலகிருஷ்ணன் வலியுறுத் தியுள்ளார். அப்போதுதான் முதலீடுகள் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தொழில்துறைக்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட்டதாக தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் 189 நாடுகளில் இந்தியா 134 வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி ஆய்வு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல் காரணமாக புதிய கொள்கைகள் எதுவும் இப்போது கொண்டுவரப்பட மாட்டாது என்றே தோன்றுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டிலாவது தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.

2013-ம் ஆண்டில் மிக முக்கிய பிரச்சினையே அரசின் செயலற்ற தன்மைதான். நீதிமன்ற தீர்ப்பு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியன தொழில்துறையில் தேக்க நிலையை ஏற்படுத்திவிட்டது. மூலதன செலவு அதிகரிப்பு, பணவீக்க உயர்வு, வெளிநாடுகளில் நிலவும் பொருளாதார சூழல் ஆகியன இந்தியாவில் பெரு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தயக்கத்தை ஏற்படுத்தின.

2014-ம் ஆண்டு தொடங்கும்போது கொள்கை வகுக்கும் அரசியல்வாதிகளிடையே முதலாவதாக உள்ள பிரச்சினை, உள்நாட்டில் முதலீட்டு சுழற்சியை ஊக்குவிப்பதாகும். முதலீட்டுக்கான அமைச்சரவை குழு சில பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் அவற்றை செயல்படுத்த வேண்டியதற்கான நடைமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். முதலீட்டாளர் நலன் சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் சூழல் உருவாக்கப்பட்டால்தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று நம்புகின்றனர்.

பொருளாதார மந்த நிலை நிலவும் சூழலில் அதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை புதிய அரசு எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் தொழில்துறையினர் மத்தியில் உள்ளது. இருப்பினும் கடந்த காலங்களில் சில துணிச்சலான கொள்கை முடிவு எடுக்கப்பட்ட போதிலும், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட விஷயங்ளில் அரசு தனது உறுதியைக் காட்டத் தவறிவிட்டது என்று சித்தார்த் பிர்லா தெரிவித்தார்.

பொருளாதாரம் வளர வேண்டுமெனில் புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு திட்டமிடுதல் அவசியம் .தொழில்துறையில் நிலவும் திறன் மிகு ஊழியர்கள் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

SCROLL FOR NEXT