வணிகம்

அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் 3 வங்கி தலைவர்கள்

பிடிஐ

அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் வங்கித் தலைவர்கள் அருந்ததி பட்டாச்சார்யா, சாந்தா கொச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவுக்கு வெளியே சர்வதேச அளவில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது.

இதில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் அருந்ததி பட் டாச்சார்யா இரண்டாம் இடத்தில் உள்ளார். ஐரோப்பிய மண்டலத்தில் மிகப் பெரிய வங்கியாகத் திகழும் பிஓடிஏஎன் குழுமத் தலைவர் பான்கோ சடென்டர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 19 நாடுகளில் உள்ள பெரும் பெண் தலைவர்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சார் 5-வது இடத்திலும் ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான ஷிகா சர்மா 19-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அருந்ததி பட்டாச்சார்யாவின் திறன் மேம்பட்டுள்ளது என்று பார்ச்சூன் சுட்டிக் காட்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு அடுத்து இவர் நியமிக்கப்படலாம் என்ற யூகங்கள் பெருமளவு எழுந்தன.

கடந்த மே மாதத்தில் துணை வங்கிகளை இணைக்கும் முடிவை வெளியிட்டு அதை நிறைவேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். வங்கிகள் இணைக்கப்பட்டால் ஆசிய அளவில் மிகப் பெரிய வங்கி களில் ஒன்றாக எஸ்பிஐ திகழும்.

இவரது பதவிக் காலம் அக்டோபர் மாதத்தில் முடிவடைய உள்ளது. இருப்பினும் இவருக்கு பதவி நீட்டிப்பை அரசு அளிக்கும் என எதிர்பார்ப்பதாக பார்ச்சூன் குறிப்பிட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியை முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த தொலை நோக்கு சிந்தனையோடு செயல்படுகிறார் சாந்தா கொச்சார் என்று பார்ச்சூன் புகழாரம் சூட்டியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் உள்ள கொச்சார், வங்கியின் வருமானத்தை அதிகரிக்கவும், கடனை வசூலிப்பதிலும் முனைப்பு காட்டி வருவதாக அது தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விரைவான வளர்ச்சியை எட்டிவரும் தனியார் வங்கிகளில் ஒன்றாக ஆக்சிஸ் வங்கி திகழ்கிறது. கடந்த நிதி ஆண்டில் வங்கியின் வருமானம் 790 கோடி டாலராக உயரவும்,1,800 நகரங்களில் 3,000 கிளைகளோடு வங்கி விரிவடையவும் இவரது பங்களிப்பு அபரிமிதமானது என்று பார்ச்சூன் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT