அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் ஆசியப் பிரிவு தலைவரைச் சந்திக்கும் திட்டதை, மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ரத்து செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மாவை வால்மார்ட்டின் ஆசிய பிரிவு தலைவரான ஸ்காட் பிரைஸ் நாளை (வெள்ளிக்கிழமை) சந்திப்பதாக இருந்தது.
இந்தியாவைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் குழுமத்துடன் வால்மார்ட் முன்னர் ஒப்பந்தம் செய்திருந்தது. சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தை வால்மார்ட் ரத்து செய்தது.
இந்நிலையில் வால்மார்ட் நிறுவன தலைவரைச் சந்திக்க, அமைச்சர் ஆனந்த் சர்மா மறுத்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் எத்தகைய தொழில் அணுகுமுறையைப் பின்பற்றப் போகிறது என்று இதுவரை தெளிவுபடுத்தவேயில்லை. ஒவ்வொரு முறை வால்மார்ட் நிறுவன அதிகாரிகள் அமைச்சகத்துடனான கூட்டத்தில் ஒவ்வொரு பிரச்னையாக எழுப்பி வருவதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வால்மார்ட் நிறுவன மேலாதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பை அமைச்சர் தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.