வணிகம்

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை எளிதாக்க மத்திய அரசு உறுதி

செய்திப்பிரிவு

இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக தொழில்முனைவோருக்கான 'ஸ்டார்ட்-அப் இந்தியா' திட்டத்தை எளிமையான வழிமுறைகளுடன் நடத்த மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

அதாவது, நட்புமுறையிலான ஒழுங்குமுறைகள், மூலதனம் சுலபமாக கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் திவால் சட்டத்தின் மூலம் எளிதாக வெளியேறுதல் வழிமுறைகள் என்று அரசு எளிமையான நடைமுறைகளுடன் ஸ்டார்ட்-அப் திட்டத்தை நடத்தவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா' (தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா) என்ற ஸ்டார்ட்-அப் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லியும் நிர்மாலா சீதாராமனும் இன்று தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்குமிருந்து 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

ஸ்டார்ட்-அப் பிரச்சினைகளின் சுமைகள் இனி இல்லை என்பதை குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு தொழில்முனைவோருடன் நெருக்கமான உறவுகளை மேற்கொள்ளும் என்றார்.

இன்று ஸ்டார்ட்-அப் திட்டத்தை தொடங்கி வைத்து விக்யான் பவனில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், நாட்டில் வர்த்தகத்தை எளிமையாக நடத்த திவால் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துக் கூறினார்.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திவால் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றம் பெறுவது உறுதியாகவில்லை.

எளிமையான கார்ப்பரேட் திவால் சட்டம் ஒரு நிறுவனத்தை மூடுவதற்கும் அவர்களது சொத்துகளை விற்பதற்கும் நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களை மீட்டெடுக்கவும் முக்கியமானதாகும். இந்தியாவில் திவால் நடைமுறைகள் தாமதமடைவதாகவும் இதனால் சொத்து மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுகிற்து என்றும் முதலீட்டாளர்கள் ஏற்கெனவே விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன் கூறும்போது, “நாட்டில் அரசு வேலையை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, மாறாக சொந்தத் தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் அதிகமாகியுள்ளது.

இத்திட்டத்துக்காக ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் உதவியையும் மத்திய அரசு அமைத்துள்ளது. ஸ்டார்ட்-அப் தொழில்முனைவு திட்டத்தில் அரசு தன் தரப்பிலிருந்து எதையும் சுமத்தாது, மாறாக தொழில் தொடங்க முற்றிலும் உதவிகரமாக அரசு செயல்படும். மத்திய அரசு இந்தியா ஆஸ்பிரேஷன் நிதி என்பதை கடந்த ஆகஸ்டில் ஏற்படுத்தியுள்ளது, இதன் மூலம் புதிய தொழில் தொடங்க மூலதனம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தொழிற் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறை செயலர் அமிதாப் காண்ட் கூறும்போது, “வேலை வாய்ப்பை உருவாக்குதலே அரசின் முதன்மை குறிக்கோள். இதற்கு ஸ்டார்ட்-அப் திட்டம் முக்கியப் பங்களிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது சிலிக்கான் வேலிக்குச் சென்று அங்கு தொழில்முனைவோர்களுடன் உரையாடியதன் மூலம் இந்திய-அமெரிக்க தொழில்முனைவோர்களிடையே பல தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேர் தொழிலாளர் சந்தைக்குள் நுழைகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பது பெரிய சவாலாகும் என்று உலக வங்கி இந்திய இயக்குநர் ஒனோ ரூல் தெரிவித்தார். ஆகவே ஸ்டார்ட்-அப் திட்டம் வெற்றி பெற இந்தியாவுடன் இணைந்து உலகவங்கி செயலாற்றும்” என்றார்.

SCROLL FOR NEXT