இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நீடித்து நிலையாக இருக் கும் என்பதால் இந்தியாவில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர் களுக்கு வானமே எல்லையாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
ஐந்து நாள் பயணமாக சீனா சென்றிருக்கும் அருண் ஜேட்லி சீன தொலைக்காட்சியான சிசிடிவிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது.
இந்தியாவில் பலவிதமான பணிகள் நடக்க வேண்டி உள்ளன. கட்டுமானம், மின்சாரம், நீர் மேலாண்மை, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தற்போது மத்திய அரசு முதலீடு செய்துவருகிறது. விரைவில் பொரு ளாதாரம் மேம்படும் சமயத்தில் தனி யார் முதலீடுகளும் இந்த துறைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பருவமழையின் பங்கு முக்கியமானது. கடந்த இரு ஆண்டு களாக பருவமழை குறைவாக இருந்தது. அதன் அடிப்படையி லேயே கடந்த இரண்டாண்டு வளர்ச்சி இருந்தது. இந்த வருடம் பருவமழை சிறப்பாக இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. பருவமழை நன்றாக இருக்கும்பட்சத்தில் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும். கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி உயரும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கடந்த நிதி ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சி அடைந்தோம். இந்த வருடம் அதே அளவு வளர்ச்சி இருக்கும். பருவமழை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வளர்ச்சி மேலும் உயரும்.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும் என்று ஜேட்லி கூறினார்.
கடந்த வருடம் சீனாவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. சீனாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.