வணிகம்

வங்கி லைசென்ஸ்: தேர்தல் ஆணையம் ஆராயும்

செய்திப்பிரிவு

தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இனிமேல்தான் ஆராய்ந்து முடிவுகளை அறிவிக்க உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்தார்.

நிறுவனங்கள் வங்கி தொடங்குவற்கான லைசென்ஸ் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் இத்தகவலை வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தேர்தல் ஆணையத்தின் கருத்துகளைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளதா என்பது தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்ட அவர், புதன்கிழமைவரை இது தொடர்பாக எவ்வித தகவலும் வரவில்லை என்று கூறினார்.

வியாழக்கிழமை வெளியான சில ஊடகங்களில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தேர்தலுக்கு முன்பாக தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு அனுமதி அளிக்காது என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டிருந்தன. அந்த அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த விஷயத்தில் மேலும் சில விளக்கங் களை தேர்தல் ஆணையத்துக்கு ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பாகவே, வங்கி தொடங்குவதற்கு லைசென்ஸ் அளிப்பது தொடர்பான விஷயங்கள் நடந்ததாகவும், இதனால் லைசென்ஸ் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவிக்காது என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

தனியார் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் அளிப்பது தொடர்பான நடைமுறை 2011-ம் நிதி ஆண்டிலேயே தொடங்கியது. இது தொடர்பான அறிவிப்பு 2011-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முழு வேகம் பிடித்தது. 26 நிறுவனங்கள் வங்கி தொடங்க விண்ணப்பித்திருந்தன.

இந்நிலையில் டாடா குழுமமும், மஹிந்திரா நிறுவனமும் வங்கி தொடங்கும் முடிவை திரும்பப் பெற்றன. தாங்கள் ஏற்கெனவே செயல்படுத்தி வரும் வங்கியல்லாத நிதி நிறுவன சேவையை மேலும் சிறப்பாக செயல்படுத்தப் போவதாக அறிவித்தன.

இந்தியா போஸ்ட், ஐஎப்சிஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் அனில் அம்பானி குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் விண்ணப் பித்திருந்தன. லைசென்ஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியிருந்தது.

கடந்த மார்ச் 7-ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு மூன்று வாரங்களில் வழங்கப்படும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவது தொடர்பான விஷயம் புதியது அல்ல. இது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் நடவடிக்கை என்பதால் இதற்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபணை தெரிவிக்காது என்று நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி செய்வதில் அதிக வங்கிகளுக்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் போட்டி அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை குறையும் என்று கூறினார். அதிக அளவிலானோர் தங்கம் இறக்குமதி செய்வதால் விலை குறைவதோடு நமது அன்னியச் செலாவணி பற்றாக்குறையும் குறையும். பல நிறுவனங்கள் தங்கம் இறக்குமதி செய்யும்போது குறைந்த விலையில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில் குறைந்த விலையிலான தங்கம் இந்தியாவுக்குள் வரும்.

தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் இறக்குமதி செய்வதற்கு அதிக அளவிலான வங்கிளுக்கு அனுமதி அளித்துள்ளது ஆர்பிஐ. இதனால் ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா, இண்டஸ் இந்த் வங்கி ஆகியனவும் தங்கம் இறக்குமதி செய்யும் அனுமதியைப் பெற்றுள்ளன.

இந்த வங்கிகள் இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவில் 20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். 80 சதவீதம் மட்டுமே உள்நாட்டு புழக்கத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையின்படி 6 வங்கிகள், 3 நிதி நிறுவனங்கள் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. தங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படமாட்டாது என்றும், சுங்க வரியைக் குறைக்கும் உத்தேசமும் அரசுக்கு இல்லை என்றும் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT