கடந்த சில வருடங்களாகவே புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அப்படியே வந்தாலும், முதலீட்டாளர்களிடம் பெரிய வரவேற்பினை அவை பெறுவதில்லை, இதனால் முதலீட்டாளர்களிடையே முதலீடுகளை திரட்ட முடியவில்லை. இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு செபி பல முயற்சி எடுத்து வருகிறது என்று அதன் தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார்.
முதலீட்டாளர்களிடையே வரவேற்பை பெற ஐ.பி.ஓ. சமயங்களில் புதுமையான விளம்பரங்களை நிறுவனங்கள் வெளியிடலாம். ஆனால் அதேசமயம், அந்த முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் பற்றியும் வெளியிட வேண்டும் குறிப்பாக முதலீட்டாளர்களுக்கு தவறான தகவல்களையோ அல்லது குழப்பவோ கூடாது என்று சின்ஹா தெரிவித்தார்.
மேலும் இந்த முதலீட்டில் இருக்கும் ரிஸ்க்கினையும், தேவையான மற்றும் கட்டாயமான தகவல்கள் கொடுப்பதிலும் எந்த விதமான சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.இருந்தாலும், நிறுவனங்கள் தங்களின் எல்லைக்கு உட்பட்டு விளம்பரங்களில் புதுமை புகுத்தலாம். இது வரவேற்கத்தகுந்த ஒன்று. இதில் செபி தலையிடாது என்றும் தெரிவித்தார்.
ஐ.பி.ஓ. வெளியிடும் போது தர மதிப்பீட்டு நிறுவனங்களின் கிரேடிங்கை கட்டாயம் பெற்றாக வேண்டும் என்ற விதிக்கு செபி இயக்குநர் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பெரிய அளவுக்கு எந்த ஐ.பி.ஓ.வும் வரவில்லை. கடைசியாக 2010-ம் ஆண்டு வந்த கோல் இந்தியாதான் பெரிய ஐ.பி.ஓ. ஆகும். தற்போதைய நிலையில் 72,000 கோடி ரூபாய் அளவுக்கு ஐ.பி.ஓ. வர தயாராக இருக்கிறது. இத்தனைக்கும் செபியின் அனுமதி இருந்தாலும் கூட, சந்தைக்கு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.