தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் ஆலை அமைப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக கோத்ரெஜ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் மெனஸெஸ் தெரிவித்தார்.
பொருளாதார தேக்க நிலை காரணமாக இந்த தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய விற்பனை மிகவும் மந்தமாக இருக்கும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கருதுகின்றன. அதை மாற்றும் வகையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி தங்களது விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் தேவையை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில் பொருள் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அதைத்தான் தங்கள் நிறுவனம் செய்யப்போவதாக அவர் கூறினார். புதிது, புதிதாகப் பொருள்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று ஜார்ஜ் கூறினார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் அல்ட்ராசோனிக் ஹார்ன் இருக்கும். வாஷிங் மெஷினில் அல்ட்ராசோனிக் சப்தம் மிகவும் புதியது. விடாப்பிடியான அழுக்கையும், கறையையும் நீக்கும் வகையில் துவைக்கும் தொழில்நுட்பம் இந்த மெஷினில் உள்ளது. இது நிச்சயம் வாஷிங் மெஷின் விற்பனையில் புதிய புரட்சியாகும்.உயர் ரக வாஷிங் மெஷின் மற்றும் ரெபரிஜிரேட்டர்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களிடம் முன்பதிவு செய்ய வேண்டும் என நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். சர்வதேச அளவிலான அடுத்த கட்ட ரெபரிஜிரேட்டர்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் வைன், சீஸ் ஆகியவற்றை வைக்க முடியும்.
மூலப் பொருள் விலையேற்றம் காரணமாக பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. இருப்பினும் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசுப் பொருள்கள் வழங்க நிறுவனம் முடிவுசெய்துள்ளது. நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிறுவன விற்பனையில் 50 சதவீதம் கிராமப்பகுதிகளிலிருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கிராமப்பகுதிகளுக்கென குறைந்த விலையிலான தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
புணே, மொஹாலியில் ஆலைகள் உள்ளன. தென்னகத்தில் ஆலை அமைக்க தீவிரமாக பரிசீலித்து இடங்களை ஆராய்ந்து வருவவதாக அவர் குறிப்பிட்டார்.