புதிதாகத் தொடங்கவுள்ள டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பாக, மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவை, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சந்தித்துப் பேசினார்.
இந்த விமான சேவைக்கு நேற்று (வியாழக்கிழமை) அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் சர்மாவுடன் ரத்தன் டாடாவின் இன்றைய சந்திப்பில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமைச் செயல் அதிகாரி கோ சூன் போங், டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் தலைவர் பிரசாத் மேனன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பான விரிவான அறிக்கை எதையும் டாடா தரப்பு வெளியிடவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதைத் தவிர வேறு எந்த விவரத்தையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று டாடா, போங் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
டாடா நிறுவனம் இந்தியாவில் தொடங்கும் இரண்டாவது விமான சேவை இதுவாகும். ஏற்கெனவே மலேசியாவைச் சேர்ந்த குறைந்த கட்டணம் கொண்ட ஏர் ஏசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த கூட்டு நிறுவனத்துக்கு எவ்வித கூடுதல் சலுகையும் நிர்ணயிக்கப்படவில்லை என்று பொருளாதார விவகாரங்களுக்கான நிதிச் செயலர் அர்விந்த் மாயாராம் கூறினார்.
மொத்தம் 10 கோடி டாலர் முதலீட்டிலான இந்த கூட்டு நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு 49 சதவீத பங்குகளும் இருக்கும். இப்புதிய நிறுவனம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அன்னிய முதலீட்டு வரம்பை எந்தக் காலத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரிக்காது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆறுபேரடங்கிய இயக்குநர் குழுவில் நான்கு பேரை டாடா சன்ஸ் நியமிக்கும்.