வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நிதிக்கொள்கை குழுவின் கூட்டம் நேற்று தொடங்கியது. வட்டி விகிதம் குறித்த முடிவை இந்த குழு இன்று அறிவிக்க இருக்கிறது. பெரும்பாலான வல்லுநர்கள் இன்று 0.25 சதவீத வட்டி குறைப்பு இருக்கும் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
பண மதிப்பு நீக்கம் காரணமாக அதிக டெபாசிட்கள் வங்கிகளில் குவிந்தன. இதனால் வங்கிகள் மற்றும் தொழில்துறையினர் வட்டி குறைப்பு தேவை என்ற கோரிக்கையை விடுத்திருக்கின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷா அனந்த சுப்ரமணியன் கூறும்போது 0.25 சதவீத வட்டி குறைப்பு சாத்தியம் என தெரிவித்தார். மேலும் இதுவரை ரிசர்வ் வங்கி குறைத்த வட்டியை வங்கிகள் நடைமுறைப்படுத்தின என்றும் அவர் கூறினார். வங்கி அமைப்பில் அதிக தொகை இருப்பதால் 0.25 சதவீத வட்டி குறைப்பு அவசியம் என யூகோ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.கே.தாகர் தெரிவித்தார்.
ஆனால் பந்தன் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகர் கோஷ் கூறும்போது ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்யும் என நினைக்கவில்லை என்று கூறினார்.
பேங்க் ஆப் அமெரிக்கா கூறும்போது இன்றும் வட்டி குறைப்பு செய்யப்படும். அதேபோல ஏப்ரல் மாதம் நடக்கும் நிதிக்கொள்கை கூட்டத்திலும் வட்டி குறைப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் முதல் நிதிக்கொள்கை கூட்டம் கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்தது. அப்போது ரெபோ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால் டிசம்பரில் நடந்த கூட்டத்தில் வட்டி குறைப்பு ஏதும் செய்யவில்லை.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 1.75 சதவீதம் அளவுக்கு ரெபோ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணவீக்கம், நிதிப்பற்றாக்குறை ஆகிய பேரியல் பொருளாதார சூழல் வட்டி குறைப்பு சாதகமாக இருப்பதாகவும் அதனால் வட்டி குறைப்பு இருக்கும் என்றே பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.