நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை (fiscal deficit)இலக்கை எட்டுவது கடினம் என்று இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.9 சதவீதமாக (ஜிடிபியில்) கட்டுப்படுத்தப் படும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் 0.20 சதவீதம் உயர்ந்து 4.1 சதவீதம் நிதிப் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக் கிறது.
நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதுதான் நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட முடியாததற்கு காரணமாகும்.
மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எண்களின் அடிப்படையில் பார்க்கும் போது, திட்டமிட்டபடி நிதிப் பற்றாக்குறை 5.56 லட்சம் கோடி ரூபாயாகத்தான் இருக்கும். ஆனால் ஜிடிபி வளர்ச்சி குறைவாக இருப்பதினால் சதவீத அடிப்படையில் இலக்கை எட்டு வது கடினம்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) நிதிப் பற்றாக்குறை இலக்கில் 87 சதவீதத்தை எட்டிவிட்டோம் அதாவது 4.83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை சென்றுவிட்டது என்று கூறப்பட்டிருக்கிறது.
வரும் பட்ஜெட்டில் நிதிப் பற்றாகுறையை கையாளுவதற்கு புதிய யுத்திகள் உருவாக்கப்படும் என்பது போல பலமான யூகங்கள் சந்தையில் உலவி வருகின்றன.
இந்தியாவின் தரமதிப்பீட்டை உருவாக்குவதில் இதுபோன்ற ரேட்டிங்ஸ் ஏஜென்சிகளின் பங்கு முக்கியமானது.
சமீப காலங்களில் வெளிநாட்டு ரேட்டிங்ஸ் ஏஜென்சிகள் இந்தி யாவின் தரமதிப்பீட்டை குறைக்க போவதாக கூறிவருகின்றன. இப்போது இந்தியாவின் தர மதிப்பீடு பிபிபி மைனஸ் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த நிதி ஆண்டில் 2016-17 ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் 7-வது சம்பள கமிஷன் காரணமாக மத்திய அரசுக்கு செலவு அதிகரிக் கும். இந்த செலவு காரணமாக 0.6 சதவீதம் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இதனால் அடுத்த நிதி ஆண்டிலும் இலக்கை எட்ட முடி யாது என்று இந்தியா ரேட்டிங்ஸ் கணித்திருக்கிறது.
வரி வருமானம்
கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வரி வருமானம் 9.19 லட்சம் கோடியாக இருக்கிறது. இது திட்டமிட்ட வருமானத்தில் 50 சதவீதமாகும். நிதிப் பற்றாக்குறையை 3.9 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் 21,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த வேண்டும். இதற்கு மானியத்தை அடுத்த நிதி ஆண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது மூலதன செலவுகளை குறைக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தி வரியை அதிகப்படுத்தி மத்திய அரசு வருமானம் ஈட்டி வருகிறது. அதேபோல ரிசர்வ் வங்கியிடம் இருந்தும் அதிக டிவிடெண்ட் வருகிறது. இது மத்திய அரசுக்கு உதவியாக இருந்தாலும், பங்கு விலக்கலுக்கு நிர்ணயம் செய்த தொகையை எட்ட முடியாதது, அதிக உணவு மற்றும் உர மானியம் போன்ற காரணங்களால் பெரிய பலனை எதிர்பார்க்க முடியாது என்று இந்தியா ரேட்டிங்ஸ் கூறியிருக்கிறது.
வர்த்தகப்பற்றாக்குறை அதிகரிப்பு
தொடர்ந்து 13-வது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி சரிந்திருக் கிறது. டிசம்பர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 14.75 சதவீதம் சரிந்து 2,229 கோடி டாலராக இருக் கிறது. சீனப்பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் இந்தி யாவின் ஏற்றுமதி சரிந்தது. இந்தியாவின் இறக்குமதி சரிந்து 3,396 கோடி டாலராக இருக் கிறது.
இதனால் வர்த்தகப்பற்றாக் குறை உயர்ந்து 1,166 கோடி டாலராக இருக்கிறது. மற்ற முக்கிய நாடுகளின் ஏற்றுமதியும் சரிந்திருப்பதாக வர்த்தக அமைச் சகம் தெரிவித்திருக்கிறது.
இன்ஜீனியரிங், பெட்ரோலியம், ஜூவல்லரி, தோல், அரிசி, பால் பொருட்கள் மற்றும் இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் ஏற்றுமதியும் சரிந்திருக்கிறது. மாறாக ஆயத்த ஆடைகள், பழங்கள், காய்கறிகள், மருந்து, டீ மற்றும் காபி ஆகியவற்றின் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரை யிலான காலத்தில் மொத்த ஏற்றுமதி 18.06 சதவீதம் சரிந்து 19,660 கோடி டாலராக இருக்கிறது. இதே காலகட்டத்தில் இறக்குமதி 15.87 சதவீதம் சரிந்து 29,581 கோடி டாலராக இருக்கிறது.