வணிகம்

பார்ச்சூன் 500 பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் : ஓஎன்சி வெளியேறியது

செய்திப்பிரிவு

பார்ச்சூன் பத்திரிகை சர்வதேச அளவிலான மிகப் பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் 7 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி வெளியேறி உள்ளது. அதேசமயத்தில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (423 வது இடம்) புதிதாக நுழைந்திருக்கிறது. இந்த பட்டியலில் சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் பட்டியலில் 161 வது இடத்தில் உள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான பார்ச்சூன் 500 பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பொதுத்துறை நிறுவனங்களும், மூன்று தனியார் நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. தனியார் நிறுவனங்களில் ரிலையன்ஸ் முன்னிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் இந்தியன் ஆயிலை தொடர்ந்து எஸ்பிஐ, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளன.

இந்தியன் ஆயில் நிறுவனம் 5,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் 161 வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் 119 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 158 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 215 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் கடந்த ஆண்டில் 280 வது இடத்திலிருந்து இந்த ஆண்டு 358 வது இடத்துக்கும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 327 வது இடத்திலிருந்து 367 வது இடத்துக்கும் சரிந்துள்ளன.

எனினும் டாடா மோட்டார்ஸ் மற்றும் எஸ்பிஐ இரண்டு நிறுவனமும் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன. கடந்த ஆண்டில் 254 வது இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு 226 வது இடத்துக்கும் எஸ்பிஐ 260 வது இடத்திலிருந்து 232 வது இடத்துக்கும் முன்னேறியுள்ளன.

பட்டியலில் முதல் இடத்தில் 4,82,13,000 கோடி டாலர்களுடன் வால்மார்ட் முதலிடத்தில் உள்ளது. 3,29,60,100 கோடி டாலர்களுடன் சீனாவின் ஸ்டேட் கிரிட் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், சீனாவின் தேசிய பெட்ரோலியம் நிறுவனம் 2,99,27,100 கோடி டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் சினோபெக் குழுமம், ராயல் டச் ஷெல், எக்ஸோன் மொபில், போக்ஸ்வேகன், டொயடா மோட்டார், ஆப்பிள் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனங்கள் உள்ளன.

இந்த பட்டியலில் உள்ள 500 நிறுவனங்களிலும் 6.7 கோடி பேர் பணிபுரிகின்றனர் என்றும் பார்சூன் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT