வணிகம்

கருப்புப் பண பதுக்கலை ஒழிக்க ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை

பிடிஐ

கருப்புப் பண பதுக்கலை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 3 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அளித்த பரிந்துரையில் ரூ. 3 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது முக்கியமானதாக உள்ளது.

இதேபோல ரூ. 15 லட்சத்துக்கும் மேல் ரொக்கத் தொகை வைத்திருக்கவும் தடை விதிக்க வேண்டும் என எஸ்ஐடி பரிந்துரைத்துள்ளது. இதற்கு வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதை அமல்படுத்துவது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இவ்விதம் தடை விதித்தால் வருவாய்த் துறை அதிகாரிகள் அதிக கெடுபிடி செய்வர், அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு வர்த்தகர்கள் இலக்காகிவிடுவர் என்பதையும் அரசு கவனத்தில்கொண்டுள்ளது.

ரூ. 3 லட்சம் என்ற வரம்பானது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அல்லது காசோலை மூலமாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்விதம் அளிக்கப்படும் தொகையை எளிதில் யார் மூலம் யாருக்குச் செல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதேசமயம் ரொக்கமாகக் கொடுத்தால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். கார் மற்றும் நகை வாங்கும்போது ரூ. 3 லட்சத்துக்கு மேலாக இருப்பின் அதை ரொக்கமாக ஏற்கக் கூடாது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் காசோலை மூலமான பரிவர்த்தனையாகவே அது இருக்க வேண்டும்.

ரொக்க பண பரிவர்த்தனையைக் குறைத்து கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு கடன் அட்டை மூலமான பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணத்தை ரத்து செய்து விட்டது.

கடந்த காலங்களில் சிறிய விற்பனையகங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதற்காக பெருமளவு ரொக்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. இப்போது அனைவருக்கும் வங்கிச் சேவை பரவலாக்கப்பட்டு விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு கொண்டு வந்த ``ஜன் தன்’’ திட்டம் மூலம் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு விட்டது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கிக் கணக்கில் சேர்த்துவிட முடியும். இதனால் நிறுவனங்கள் பெருமளவு ரொக்கத்தைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.

மேலும் சொத்து பரிமாற்றத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கும் மேலான தொகையை ரொக்கமாக ஏற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதேபோல வங்கிக்கு திரும்ப செலுத்தவேண்டிய கடன் தவணைக்கான ரொக்க வரம்பையும் வரையறுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள நடைமுறையை உதாரணமாகக் காட்டியுள்ளது. இவ்விரு நாடுகளிலும் ரொக்க பரிவர்த்தனைக்கான அளவை சுட்டிக்காட்டியுள்ளது. ரூ. 20 ஆயிரத்துக்கும் மேலான பரிவர்த்தனைக்கு வரி (டிடிஎஸ்) பிடித்தம் செய்ய வேண்டும். இது போன்ற பரிவர்த்தனைகள் காசோலைகள் மூலமாக நடந்தால் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். இந்தத் தகவலும் வருமான வரித்துறை கவனத்துக்கு வரும். ஆனால் நடைமுறையில் இது பெரும்பாலான பரிவர்த்தனையில் நடைபெறுவதில்லை என்று எஸ்ஐடி சுட்டிக் காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT