டெல்லியில் அடுத்த மாதம் நடக்கும் தேசிய வணிகர்கள் மாநாட்டில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு பின் அதன் தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் சார்பாக டெல்லியில் வரும் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தேசிய வணிகர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். தேசிய அளவில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
இந்த மாநாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, உணவு தர நிர்ணய சட்டம் போன்றவற்றை எதிர்த்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளோம். மேலும் மாநாட்டிற்கு வரும் அரசியல் பிரமுகர்களிடம் எங்களது கோரிக்கைகளை அவர்களது தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.