வணிகம்

டயர் நிறுவனங்களின் பங்குகள் மீது கவனம் செலுத்தும் மியூச்சுவல் பண்ட்கள்

செய்திப்பிரிவு

தற்போதைய நிலைமையில் மியூச்சுவல் பண்ட்களின் விருப் பமான துறையாக டயர் நிறுவன பங்குகள் இருக்கின்றன. சர்வதேச அளவில் ரப்பர் விலை கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. இதனால் டயர் நிறுவனங்களின் நிகர லாப வரம்பு அதிகமாக இருக்கிறது.

எனவே இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி எம்.ஆர்.எப்., அப்போலோ, ஜேகே டயர், சியட் மற்றும் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கணிசமாக முதலீடு செய்திருக்கின்றன.

டோக்கியோ கமாடிட்டி சந்தையில் ரப்பரின் விலை ஐந்து வருடங்களில் இல்லாத அளவு குறைந்திருக்கிறது. ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடான தாய்லாந்தில் உற்பத்தி அதிகரித்தது மற்றும் ரப்பர் நுகர்வில் முன்னணியில் இருக்கும் நாடான சீனாவில் தேவை குறைந்தது ஆகிய காரணங்களால் விலை சரிந்தது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஏற்றம் மற்றும் விழாக்காலத்தில் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு போன்ற காரணங்களால் டயர் நிறுவன பங்குகளில் மியூச்சுவல் பண்ட் மேனேஜர்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். ஜே.கே டயர் நிறுவன பங்கில் டிஎஸ்பி பிளாக்ராக் ரூ.48.56 கோடி, சுந்தரம் மியூச்சுவல் பண்ட் ரூ.3.94 கோடி, எஸ்.பி.ஐ. ரூ.7.6 கோடி மற்றும் யூடிஐ ரூ 3.59 கோடியும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

அப்போலோ டயர் பங்கில், யூடிஐ ரூ.75.26 கோடி, ஹெச்.டி.எப்.சி. ரூ. 50.17 கோடி, எஸ்.பி.ஐ. ரூ. 33.04 கோடி, கோடாக் ரூ.27.13 கோடி மற்றும் ஐசிஐசிஐ ரூ.32.74 கோடியும் முதலீடு செய்திருக்கின்றன.

எம்.ஆர்.எப். பங்கில் ஐடிஎப்டி ரூ. 120 கோடி, யூடிஐ ரூ.266 கோடி, பிர்லா சன்லைப் ரூ.113 கோடி, டாடா மியூச்சுவல் பண்ட் ரூ. 35.4 கோடியும் முதலீடு செய்திருக்கின்றன. இந்த தகவல் அனைத்தும் ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி. டயர் தயாரிப்பில் 30 சதவீதம் பங்கு கச்சா எண்ணெய் ஆகும். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் டயர் நிறுவனங்களுக்கு மேலும் சாதகமானதாகும்.

SCROLL FOR NEXT