வணிகம்

சென்னையில் ரூ.300 கோடியில் பிளாஸ்டிக் தொழில் பூங்கா

செய்திப்பிரிவு

சென்னையில் ரூ.300 கோடி செலவில் பிளாஸ்டிக் தொழில் பூங்கா ஒன்று உருவாக உள்ளது. வட சென்னையில் 300 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைய உள்ளது.

சிப்காட் மற்றும் டிட்கோ உள்ளிட்ட தமிழக அரசு நிறுவனங்கள் கூட்டாக இந்தப் பூங்காவை ஏற்படுத்த உள்ளன. மத்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத்துறையிடம் இதற்கான சிறப்பு அனுமதியும் ரூ.40 கோடி உதவித் தொகையையும் டிட்கோ கோரியுள்ளது. பொதுவாக இதுபோன்ற தொழில் பூங்கா உருவாக்குவதற்கு மத்திய அரசு உதவி அளிக்கும்.

இதுதொடர்பாக விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 243 கோடியாகும். எண்ணூர் துறைமுகம் மற்றும் எல் அண்ட் டி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே அருகே மாநில அரசுக்குச் சொந்தமாக உள்ள இடத்தில் இந்த தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.

நடுத்தர மற்றும் சிறு தொழில் தொடங்குவோருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த தொழில்பூங்கா இருக்கும். இந்த பூங்காவில் சுமார் 70 தொழிற்சாலைகளை அமைக்க முடியும். இதன் மூலம் 2,500 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

முதல் கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) தனது மசகு எண்ணெய்களை அடைப்பதற்கான பிளாஸ்டிக் டப்பாக்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது.

மத்திய அரசின் உதவியோடு இதுபோன்ற தொழில் பூங்காக்கள் மத்தியப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT