வணிகம்

காலாண்டு முடிவுகள் - டாடா கெமிக்கல்ஸ், ஃபைசர், விஜயா வங்கி, சென்ட்ரல் பேங்க்

செய்திப்பிரிவு

டாடா கெமிக்கல்ஸ் லாபம் சரிவு

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கெமிக்கல்ஸின் செப்டம்பர் காலாண்டு லாபம் 47 சதவிகிதம் சரிந்து ரூ.134.44 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ. 256.77 கோடியாக இருந்தது. ஐரோப்பிய பிரச்னை, குறைவான லாபம், கென்யாவில் நிலவும் சூழ்நிலை போன்றவை காரணமாக லாபம் குறைந்திருப்பதாக டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் சொல்லி இருக்கிறது.

அதே சமயத்தில் நிறுவனத்தின் வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் ரூ 4,173 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ 4,344 கோடியாக இருக்கிறது.

ஃபைசர் நிகர லாபம் 33% உயர்வு

பார்மா துறை நிறுவனமான ஃபைசர் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 33 சதவிகிதம் உயர்ந்து ரூ 69.59 கோடியாக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ 52.28 கோடி மட்டுமே.

நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த செப்டம்பர் காலாண்டை விட சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ 268.44 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருமானம், இப்போது ரூ.298.87 கோடியாக இருக்கிறது.

வர்த்தகத்தின் முடிவில் 1 சதவிகிதம் உயர்ந்து 1178.90 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

சென்ட்ரல் பேங்க் நஷ்டம் ரூ. 1508 கோடி

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா செப்டம்பர் காலாண்டில் ரூ1,508 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது.

அதே சமயம் கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கி ரூ. 359.92 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது.

அதே சமயத்தில் வங்கியின் மொத்த வருமானம் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது.

கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் ரூ. 5,680.63 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.6,236 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வர்த்தகத்தின் முடிவில் 4 சதவிகிதம் சரிந்து 56.2 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.

விஜயா வங்கியின் லாபம் 10.41% உயர்வு

விஜயா வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ 136.22 கோடியாக இருக்கிறது.

கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ 123.37 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பெற்றிருந்தது.

வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பரில் ரூ2,301.72 கோடியாக இருந்த வருமானம், இப்போது ரூ 2,813.66 கோடியாக உயர்ந்திருக்கிறது.

அதே போல வங்கியின் மொத்த வாராக்கடனும் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பரில் 3.17 சதவிகிதமாக இருந்த வாராக்கடன், இப்போது 2.77 சதவிகிதமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT