ஓய்வூதிய நிதிகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் யு.கே. சின்ஹா வலியுறுத்தினார். ஓய்வூதியம் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் உள்ள நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி ஓய்வூதிய சந்தை ரூ. 1.5 லட்சம் கோடியாகும். இது 2015-ம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கோடியாகவும், 2020-ல் 3 லட்சம் கோடியாகவும், அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தனிநபர் ஓய்வூதிய பணம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி, சிறு சேமிப்பு உள்ளிட்டவைகளும் அடங்கும்.
இந்தியாவில் ஓய்வூதிய நிதித் திட்டங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கிடையாது. அதேசமயம் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு உகந்த வரி சலுகைகளை அளிக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் 15 சதவீத அளவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தபோதிலும் அதற்கு இதன் அறங்காவலர்கள ஒப்பு கொள்ளவில்லை.