இலவச அழைப்புகள், ரோமிங் கட்டண ரத்து, குறைந்த கட்டணத்தில் 4ஜி என பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஜியோ 4ஜி சேவையில் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பொதுக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை குறித்த முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களை எட்டுவதே நோக்கம் என்றும், மேலும் இந்தியாவின் 18,000 நகரங்கள், 2 லட்சம் கிராமங்கள் என 90 சதவித மக்களை (1.25 பில்லியன்) மார்ச் 2017க்குள் சென்றடைவதே ரிலையன்ஸ் ஜியோவின் குறிக்கோள் என்றும் அறிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய அம்சங்கள்:
# நாடு முழுவதும் இலவச மொபைல் அழைப்புகள்
# ரோமிங்க் கட்டணம் ரத்து
# 4ஜி இணையத்தில் 1 ஜிபி பயன்பாட்டுக்கு ரூ. 50 கட்டணம்
# மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம்
# முதல் 4 மாதங்களுக்கு மட்டும் இலவச இணைய பயன்பாடு
# ரூ. 19-ல் இருந்து மொபைல் திட்டங்கள்
# குறைவாக பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு இணையம் உபயோகிப்போருக்கு மாதத்துக்கு ரூ. 4,999 வரை.
# ரிலையன்ஸ் ஜியோ செயலி (ரூ.15,000 மதிப்புள்ளது) வரும் டிசம்பர் 31, 2017 வரை இலவசம்
# ரிலையன்ஸின் 'லைஃப்' பிராண்ட் மொபைல்கள் ரூ.2,999-ல் இருந்து விற்பனையாகும்
ரிலைய்ன்ஸ் ஜியோ செப்டம் 5-ம் தேதி முதல் சந்தைக்கு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்புகள் மற்ற மொபைல் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட மற்ற முன்னணி மொபைல் சேவை நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி சிம்ம சொப்பனமாகவே இருக்கும் என துறை வல்லுநர்கள் இப்போதே கணித்து வருகின்றனர்.