நாம் முன்னர் பார்த்த அரசின் நான்கு அடிப்படை செயல்பாடுகளில் வருவாய் மறு பகிர்வு (Income Redistribution) மிக முக்கியமான ஒன்றாகும்.
ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானம் (GDP) அந்நாட்டு மக்களிடம் எப்படி பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது என்பதை பொருளாதாரத்தில் ‘வருவாய் பகிர்வு’ (Income Distribution) என்கிறோம். இந்த 'வருவாய் பகிர்வு' சமூகம் ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு மிக சமமற்ற முறையில் இருக்கும் பட்சத்தில், ‘வருவாய் மறுபகிர்வு’ என்பது ஒரு அரசியல் பொருளாதார அவசியம் ஆகின்றது.
எந்த ஒரு சமூகமும் சமத்துவமின்மையை போற்றியதில்லை, மாறாக எல்லா சமூகமும் சமத்துவமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கவே தொடர்ந்து முனைந்துள்ளன. ஆடம் ஸ்மித் முதற்கொண்டு அமர்த்ய சென் வரையிலான பெரும் பொருளியல் அறிஞர்கள் இது பற்றி மிக ஆழமாகவும் விரிவாகவும் தொடர்ந்து விவாதித்துள்ளனர். வருவாய் மறுபகிர்வு என்பது அமெரிக்கா உட்பட்ட பெரும்பாலான உலக நாடுகளில் அரசின் அடிப்படை பொறுப்பாகி விட்டது.
வருவாய் ஏற்றத்தாழ்வினை (Income Inequality), நாட்டிலுள்ள வறுமையின் அளவு, வேலையில்லாமையின் அளவு, பல்வேறு பிரிவு மக்களுக்கிடையில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வின் அளவு என பல முறையில் கணக்கிடமுடியும்.
மறுபகிர்வினை செய்ய, அரசு பயன்படுத்தும் முக்கிய கருவிகள் தனது வரி வருவாய், பொதுச்செலவு கொள்கைளை மாற்றம் செய்வதாகும். உதாரணமாக வளர்வீத வரிமுறை. (Progressive Taxation) வருவாய் அதிகமுள்ளவர்களிடம் அதிக வரி வருவாயினை பெற்று வருவாய் குறைந்தவர்களுக்கு பல சமுக நலத்திட்டங்கள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கும்.
ஜி டி பி யில் கல்விக்கு குறைந்தபட்சம் ஆறு சதவீதமும், சுகாதாரத்துக்கு 2-3 சதவீதமும் பொதுசெலவு செய்வோம் என்பது போன்ற 2004 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியிட்ட வாக்குறுதியும் இந்த அடிப்படையில் அமைந்தவையே.