பல வங்கிகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகள் நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் பிரதமருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றால் வங்கித்துறையில் தலைவர் பதவிகள் காலியாக இருக்க கூடாது என்று அனைந்திந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறிடியிருந்தார்.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் தலைவர் பதவி பல்வேறு காரணங்களால் காலியாக இருகிறது.
சிண்டிகேட் வங்கியின் தலைவராக இருந்த எஸ்.கே.ஜெயின் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த பதவி காலியாக இருக்கிறது. யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அர்ச்சனா பார்கவா விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பிறகு அந்த பதவி இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.
பேங்க் ஆப் பரோடாவின் தலைவர் எஸ்.எஸ்.முந்த்ரா ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டதால் அந்த வங்கித் தலைமை பதவியும் காலியாக இருக்கிறது.
கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கி தலைவர்களின் பதவி காலம் முடிந்துவிட்டது. அந்த பொறுப்புக்கு உரிய நபர்கள் இன்னும் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
மேலும், அலாகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் இந்தியா ஆகிய வங்கிகளின் செயல் இயக்குநர் பதவிகளும் காலியாக இருப்பதாகவும் அந்த பதவிகளை விரைவில் நியமிக்க வேண்டும் என்றும் வெங்கடாசலம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.