வணிகம்

தன் முடிவைத் தானே தேடும் சூட்சுமம்

கே.ஆர்.செந்தில்வேல்குமார்

மீபத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft) என்ற உலகப் புகழ் பெற்ற அமெரிக்க கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் தனது பழைய விண்டோஸ் எக்ஸ்பி மென்பொருளுக்கு (Windows XP Operating System) தான் அளித்து வந்த சேவையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து நிறுத்திக் கொள்வதாக அறிவித்ததை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இப்போது எல்லா ஊடகங்களின் மூலமும் பரவிக் கொண்டிருக்கும் இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, இந்த மென்பொருளை இந்நிறுவனத்தின் துணை கொண்டு இனிமேல் வாடிக்கையாளர்கள், புதிய தேவைகளுக்கு உபயோகிக்கும் வண்ணம் புதுப்பித்துக் கொள்ளவோ அல்லது, விஷமிகளின் தாக்குதலிலிருந்து தங்களின் தகவல்களை முன்னைப்போல் பாதுகாத்து வைக்கவோ முடியாது.

மைக்ரோசாப்ட் அதற்கு அடுத்ததாக அண்மைக்காலத்தில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 போன்ற சாப்ட்வேரைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களை புதிய சாப்ட்வேருக்கு மாற்ற வைக்கவே இந்த முடிவு எனக் கூறப்படுகிறது. இதனால், உலகமெங்கும் விண்டோஸ் எக்ஸ்பியை உபயோகித்து வரும் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த புதிய மென்பொருளை (சாப்ட்வேர்) வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பிராண்டுகள், இப்படி தானே திட்டமிட்டு தன் பொருளை ஒரு காலகட்டத்திற்குப் பின் உபயோக மற்றதாக மாற்றுவதை (Planned Obsolescence) பலவகையாகப் பிரிக்கலாம். சில சமயத்தில் இவை நல்லெண்ணத்தில் செய்யப்படுபவையாக அமைகின்றபோது வாடிக்கையாளர்களின் நல்லாதரவே கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, உணவு, மருந்து, மற்றும் அழகு சாதனப் பொருட்களில் இது சகஜம்.

குறிப்பிட்ட பிராண்டே தனது பொருள் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு மேல் உபயோகிக்கத் தகுதியற்றது என்பதை உறையின் மேல் குறிப்பிடு கிறது. இதனால், பிராண்டை விற்கும் நிறுவனங்களுக்கும், அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கும் கடைகளுக்கும் ஏகப்பட்ட அசெளகரி யங்கள்! காலாவதியான பழைய பொருட்களை உடனுக்குடன் கண்டறிந்து, அவர்கள் அதை மாற்ற வேண்டியிருக்கிறது.

எனினும், இவை மக்களிடையே நன்மதிப்பினைக் கூட்டவே உதவுகிறது. இதுபோன்ற செயல்முறை, அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் நேர்மையைப் பொருத்து சிறப்பாக அமைகிறது.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் பொருட்களில் புதியவகைப் பொருளை அடிக்கடி அறிமுகப்படுத்துதல் அவசியமாகிறது. மக்களின் புதிய தேவைக்கு, பழைய பொருள் ஈடுகட்ட முடியாமற்போவதே இதற்குக் காரணம். கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றில் இம்முறையைப் பார்க்கிறோம்.

இதில் சில பிராண்டுகள், பழைய பொருளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவையையோ அல்லது புதிய பொருளுக்கு மாற சலுகையையோ வழங்குகின்றன. இவற் றைக் கண்டுகொள்ளாத பிராண்டுகளோ வாடிக் கையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கின்றன.

இதே போன்று, நவநாகரிக ஆடை மற்றும் அலங்காரப் பொருட்களை (Fashion Accessories) விற்கும் பிராண்டுகள் தன் ஒவ்வொரு பொருட் களின் ஆயுளையும் (Durability) தானே குறைத்து புதிய பொருட்களை அடிக்கடி அளிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளன. இப்பொருட் களுக்கு நீண்டகாலம் உழைக்கவேண்டிய தன்மை அவசியமற்றதாக இருப்பதால் நிறைய பயன்கள் – பொருட்களை குறைவான விலைக்கு விற்க முடிகிறது; மேலும், வாடிக்கை யாளர்களை அடிக்கடி புதிய பொருட்களை வாங்க வைக்க முடிகிறது.

மாறாக, இவை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சலவை இயந்திரங்கள் மற்றும் இதர வீட்டு சாதனங்கள் போன்றவை எனும் போது அதன் நிலைமையே வேறு! இவற்றை விற்கும் பிராண்டுகள் பல, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதியவற்றை (New Models) அறிமுகப்படுத்துகின்றன.

அறிமுகப்படுத்தப்படும் புதிய பொருட்கள், முன்னரில்லாத வண்ணமும், மேம்படுத்தப்பட்ட வடிவமும் கொண்டு வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் வேறுபட்டு, பழைய பொருளை, வாடிக்கையாளர்கள் உபயோகிப்பதை விட்டுவிட்டு புதியதை வாங்கவேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுவதற்காக மட்டுமே செய்யப் படுகிறது.

புதிய தேவை எதையும் அடிப்படையாகக் கொள்ளாமல் வெறும் ஆவலைத் தூண்ட மட்டுமே இவைபோன்ற வெளிப்புற மாற்றம் செய்யும்போது, அது விற்போருக்கோ அல்லது வாங்குவோருக்கோ ஆரோக்கியமான பெரும்பலனளிக்காத வீண்முயற்சியாகிறது. அதிக விலை கொண்ட, ஒரு பிரசித்தி பெற்ற பிராண்டை வாங்கும் எவரும் பெற நினைக்கும் பலன்கள் இரண்டு. ஒன்று உத்தரவாதமான தரம் கொண்ட பொருள்.

மற்றொன்று, பலர் பார்க்க, தான் அந்த பிராண்டை உபயோகிக்கும்போது கிடைக்கும் பரவசம். புதிய வடிவங்கொண்டு பிராண்ட் மாறும்போது, அதன் பழைய வடிவம் கொண்ட பொருளை வைத்திருப்போருக்கு, அது பிராண்டின் அடையாளத்தை இழப்பதால், பரவசத்திற்கு வாய்ப்பில்லாமற்போகிறது.

இவையனைத்தையும் தாண்டி, சுய லாபத்தை மட்டுமே கருத்திற்கொண்டும் சில செயல்களை பிராண்டுகள் செய்கின்றன. அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களில் இது பிரபலம். வாடிக்கையாளர்களை தன் பொருளை நிறைய உபயோகிக்க வைத்து, சீக்கிரம் தீர்த்து, அடுத்த முறை பொருளை வாங்க வைப்பதே இந்த குறிக்கோளாகும். நற்பெயரெடுத்த பிராண்டுகள் மற்றும் அவ்வளவு பரிச்சயமில்லாத பிராண்டுகள் என எல்லாத்தரப்பட்ட பிராண்டுகளிலும் இது சகஜமாயுள்ளது. எனவே, பிராண்டுகளை அடையாளம் கண்டறிவதில் மும்முரம் காட்டாமல், அவை செய்யும் செயல்களை மட்டும் அலசுவோம்.

பற்பசை குழாயின் முனையை அளவுக்கதிகமாக பெரியதாக வைத்து, அதில் சிறிய அளவில் பற்பசையை வெளியே எடுப்பது கடினமாக்கப்படும்.

கழிவறை சுத்தம் செய்யும் திரவமுள்ள டப்பாவில், துவாரத்தின் அளவு அதிகமாக வைக்கப்பட்டு, ஒவ்வொரு முறை டப்பாவைக் கவிழ்க்கும்போதும் தேவைக்கதிகமாகவே திரவம் கொட்டும். இதில் பாதி மட்டுமே உபயோகிக்கக் கிடைக்கும், மீதி தரையில் கொட்டி வீணாக வெளியேறும். கூந்தல் வளர்ச்சிக்குதவும் தைலம், ‘நல்ல பலனுக்கு ஒரு நாளைக்கு இருமுறை’ பயன்படுத்தச் சொல்லி அறிவுரை சொல்லும்.

உண்மையில், உபயோகிப்போருக்கு ஒருமுறையே போதுமான போதும், விற்ப வருக்கோ அது போதாமல் போகிறது. இதுபோன்ற உதாரணங்களை நீண்ட பட்டிய லிட்டுக் கொண்டே போகலாம்! ஆனால், இத்தகைய பிராண்டுகளின் செயல்கள், தங்கள் பொருட்களைத் தொடர்ந்து வாங்குவோரின் விசுவாசத்தைப் பாராட்டி வெகுமதி அளிப்ப தற்குப் பதில், அவர்களைத் தண்டிப்பது போன்றேயிருக்கிறது.

ஒவ்வொரு முறை பிராண்ட் வெற்றியடையும் போதும், அதனை வாங்கும் வாடிக்கை யாளர்களும் வெல்லவேண்டும். இல்லையேல், வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதற்கோ அல்லது பிராண்டுகளின் வெற்றியை நீண்டகாலம் நிலைக்க வைப்பதற்கோ வாய்ப்பேயில் லாமல் போய்விடும் – சரியா?

krsvk@jsb.ac.in

SCROLL FOR NEXT