மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அனைத்து ரக கார்களுக்குமான விலையை உயர்த்த உள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து அனைத்து ரக கார்களுக்குமான விலை உயர்த்தப்படும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. ரூபாய் பண மதிப்பு சரிவு மற்றும் உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவும், மூலப் பொருட்களுக்கான செலவு அதிகரிப்பும் நிறுவனத்தின் மொத்த செலவினங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தையிடுதல் பிரிவு துணைத் தலைவரான ராகேஷ் வாஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.
விலையேற்றம் குறிப்பாக ரூ.3,000 த்திலிருந்து ரூ.20,000 வரை இருக்கும் என்றும், அனைத்து ரக மாடல்களிலும் இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் அவர் கூறினார். பல செலவுகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டாலும் ஈடுசெய்ய முடியாத கட்டத்தில்தான் விலையை அதிகரிப்பது குறித்து யோசித்தோம் என்றும் இந்த விலை உயர்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து இருக்கும் என்றும் வாஸ்தவா குறிப்பிட்டார்.