மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது அமலாக்கத்துறை ரூ. 7.3 கோடி ரொக்கம் மற்றும் 5.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
இது தொடர்பாக எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது:
உரிய வருமான வரி செலுத்தா மல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகையை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடாக செயல்பட்டதாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார்.
பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு அமலாக்கப் பிரிவினர் ஃபெமா சட்டத்தின் கீழ் 18 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்போது மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத் தொகை ரூ.7.30 கோடியாகும். இது தவிர தங்கம் 5.5 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர 5,100 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இவர்களது சேமிப்புக் கணக்கில் இவர்களது வருமானத்தைவிட அதிக அளவுக்கு பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்ட கரன்சிகள் டெபாசிட் செய்யப் பட்டுள்ளன. இந்த வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ. 610 கோடியாகும்.
அமலாக்கத் துறையினர் மேற் கொண்ட நடவடிக்கையின் மூலம் கடந்த ஜனவரி 10-ம் தேதி ரூ.5,400 கோடி கணக்கில் காட்டப் படாத பணம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார்.
536 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு திட்டத்தை (சிஎஸ்ஆர்) உரிய வகையில் செயல்படுத்தத் தவறி விட்டன. அவ்விதம் தவறிய 536 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவன விவகாரங்கள்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேகாவால் கூறினார்.
லாபம் ஈட்டும் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைக்கு உரிய தொகை செலவிடவில்லை. இது தொடர்பாக நிறுவன பதிவாளர் மூலம் விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக எழுத்துமூலமாக மாநிலங் களவைக்கு அளித்த பதிலில் அவர் தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் 5,097 நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைக்கு ரூ.9,822 கோடி செலவிட்டுள்ளன. கடந்த இரண்டு நிதிஆண்டில் 12,431 நிறுவனங்கள் ரூ. 18,625 கோடியை செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ. 5 கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது லாபத் தொகையில் 2 சதவீதம் செலவிட வேண்டும் என்பது விதிமுறையாகும்.
16,200 கோடி கறுப்புப் பணம்
கடந்த இரண்டு ஆண்டுகளில். 16,200 கோடி கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜேட்லி கூறினார். ஹெச்எஸ்பிசி வங்கியில் இந்தியர்கள் கணக்கில் காட்டாமல் போட்டு வைத்துள்ள தொகை இது என்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தை மீட்பதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பயனாக இதுவரை ரூ.8,200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கணக்கில் கொண்டு வரப்பட்ட தொகை ரூ. 1,497 கோடியாகும். வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள தொகை தொடர்பாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் சங்கம் (ஐசிஐஜே) வெளியிட்டுள்ள தகவலின்படி ரூ. 8 ஆயிரம் கோடி முடங்கியுள்ளதாக அவர் கூறினார். இருப்பினும் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள தொகை குறித்த அதிகாரபூர்வ கணக்கீடு ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக அவர் கூறினார்.