தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக, நிபுணர்கள் கணித்தது போலவே இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
இன்று (திங்கள்கிழமை) வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே அதிக இடைவெளியுடன் இந்திய பங்கு சந்தைகள் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையின் அதிகபட்ச புள்ளியான 6357 என்ற நிலையை உடைத்துக்கொண்டு 6415 என்ற புள்ளியில் தேசிய பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கியது.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு 6357 என்ற புள்ளியை உடைத்த நிஃப்டி, முதல் முறையாக 6400 புள்ளிகளுக்கு மேலே சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 6363 புள்ளிகளில் முடிவடைந்தது.
இதே போல மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையில் 21484 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 21326 புள்ளிகளில் முடிவடைந்தது.
நான்கு மாநில தேர்தல் முடிவுகள்தான் இந்த ஏற்றத்துக்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான அரை இறுதியாகவே நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் பார்க்கப்பட்டன.
ரூபாய் மதிப்பு உயர்வு
கடந்த நான்கு மாதங்களில் இல்லாத ரூபாய் மதிப்பு உயர்ந்திருக்கிறது. வரும் டிசம்பர் 18ம் தேதி நடக்கும் ஃபெடரல் ரிசர்வ் கூட்டத்தை பற்றி கரன்ஸி சந்தை கண்டுக் கொள்ளவில்லை.
வர்த்தகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 61.13 ஆக இருந்தது. ஆனால் வர்த்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு டாலர் 60.84 ரூபாய் என்ற விலையில் வர்த்தகத்தை துவக்கியது.