நாட்டில் பொதுத்துறை வங்கி கள் நிர்வகிக்கும் தானி யங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் (ஏடிஎம்) 30 சதவீதம் செயல்படவில்லை என்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.
இது தொடர்பாக எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியது: ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் பொதுத்துறை வங்கிகள் நிர்வகிக்கும் ஏடிஎம் களில் 30 சதவீதமும் தனியார் துறை வங்கிகளின் ஏடிஎம்களில் 10 சதவீதமும் செயல்படவில்லை. மொத்தம் 4 ஆயிரம் ஏடிஎம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரு நகரங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகள் உள்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏடிஎம்களின் செயல்பாடு ஆராயப்பட்டதில் இந்த தகவல் வெளியானதாக அவர் குறிப்பிட்டார்.
4,000 ஏடிஎம்களில் 30 சதவீதம் அதாவது பொதுத்துறை வங்கி ஏடிஎம்களில் 600 ஏடிஎம்கள் செயல்படாதது கண்டறியப்பட்டது. இதே போல தனியார் வங்கி ஏடிஎம் களில் 100 ஏடிஎம்கள் 10% பழுதாகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஏடிஎம்கள் செயல்படாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் தொழில்நுட்பக் கோளாறு, நெட்வொர்க் கிடைக்காதது மற்றும் மின் தடை ஆகிய காரணங்களால் செயல்படவில்லை. சில ஏடிஎம்களில் போதிய பணம் இல்லாததும் கண்டறியப்பட்டது.
எந்தெந்த வங்கிகளின் ஏடிஎம் கள் என்ற முழு விவரத்தையும் அந்த அறிக்கையில் குறிப்பிட வில்லை என்றார் அமைச்சர்.
மே மாத நிலவரப்படி நாட்டில் வங்கியுடன் இணைந்த 1,02,779 ஏடிஎம்களும், தனியான ஏடிஎம்கள் 1,11,492-ம் உள்ளன.