தொழில் முனைவோரின் மாறிக்கொண்டே இருக்கும் முதலீட்டு சிந்தனையை Keynes என்ற பொருளியல் அறிஞர் animal spirit என்ற வார்த்தையைக் கொண்டு விவரிக்கிறார். சில நேரங்களில் பொருளாதாரம் வேகமாக வளரும், லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்று நினைத்து தொழில் முனைவோர் அதிக முதலீடு செய்யத் துடிக்கின்றனர். வேறு ஒரு காலத்தில், இதற்கு எதிர்மாறான முடிவுகளையும் எடுக்கின்றனர். தொழில் முனைவோரின் animal spiritயை மாற்றுவதுதான் பொருளாதாரம் வளர முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
உழைப்பு
மனிதன் உடல் திறன், சிந்தனைத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யும் உற்பத்தி செயல்பாடு உழைப்பு என்பதாகும்.
ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் செலவிடப்பட்ட உழைப்பின் அளவை பொறுத்துதான் அப்பொருளின் மதிப்பு இருக்கும் என்று அரிஸ்டாட்டில் முதல் பல அறிஞர்கள் கூறிவந்தனர். பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் ஆடம் ஸ்மித், உழைப்பு மதிப்பு கோட்பாட்டை உருவாக்கினார். அதில் ஒரு பொருளை உற்பத்தி செய்ய செலவிடப்பட்ட உழைப்புக்கு சமமாக அப்பொருளின் மதிப்பு இருக்கவேண்டும் என்றார். உழைப்பதால் மனிதனுக்கு பயன்பாட்டு இழப்பு ஏற்படுகிறது, அதற்கு சமமாக பொருளின் மதிப்பு இருக்க வேண்டும் என்றார் ஸ்மித். இதனை விரிவாகவும் அழுத்தமாகவும் கூறியவர் கார்ல் மார்க்ஸ். உழைப்பின் உபரிதான் லாபம் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆனால், ஒரு பொருளின் மதிப்பு அப்பொருளின் உற்பத்திச் செலவில் மட்டுமல்லாது, அதன் தேவையைப் பொருத்தும் அமையும் என்று மற்ற பொருளியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
நிலம்
நிலம் என்பது இந்த சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா இயற்கை செல்வங்களை குறிக்கும். சூரிய ஒளி, வெப்பம், காற்று, நீர், நிலம், ஆகாயம், எல்லா கனிமங்கள் என பலவற்றையும் நிலம் குறிக்கிறது. நிலத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, விவசாயத்தில் நிலம் என்பது நிலத்தில் உள்ள அழிக்கமுடியாத இயற்கை உரம் என்று ricardo என்ற பொருளியல் அறிஞர் குறிப்பிடுகிறார்.
உற்பத்தியில் நிலம், உழைப்பை மற்ற உற்பத்தி காரணிகளில் இருந்து பிரிக்கமுடியாதது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். எனவே இவை இரண்டும் பிரதான உற்பத்திக் காரணிகளாக இருக்கின்றன.