ஒரு கடன் பத்திரம் (bond) அடுத்த வருடம் இதே நாளில் ரூ1,000 தருவதாக கூறி இன்று விற்பனைக்கு வருகிறது. நீங்கள் அந்த கடன் பத்திரத்தை என்ன விலைக்கு வாங்குவீர்கள்? நிச்சயமாக ஒரு வருடத்திற்கு பிறகு கிடைக்கும் ரூ1,000 இன்றும் அதே மதிப்புடன் இருக்காது, எனவே ரூ 1,000-த்தை விட குறைவான விலையில் அந்த கடன் பத்திரத்தை வாங்க முன்வருவீர்கள்.
உதாரணமாக 10% கழிவை நீங்கள் எதிர்பார்த்தால் பத்திரத்தின் தற்போதைய விலை ரூ 909.09. ஏனெனில், இந்த கடன் பத்திர விலையில் (ரூ 909.09) ஒரு வருடத்திற்கு 10% வட்டியையும் சேர்த்தால் (ரூ90.91)அடுத்த வருடம் bond விற்றவர் உங்களுக்கு ரூ.1,000 கொடுக்கவேண்டிவரும்.
இவ்வாறு எதிர்கால பணவரவின் நிகழ் கால மதிப்பைக் கணக்கிடுவது நிகழ் கால மதிப்பு (Present Value). அடுத்த வருடம் வரக்கூடிய ரூ. 1,000-த்தின் இன்றைய மதிப்பு ரூ. 909.09. இந்த நிகழ் கால மதிப்பைக் கணக்கிட ஒரு கழிவு விகிதம் பயன்படுத்துவோம், அதற்கு பெயர் discount rate (தள்ளுபடி விகிதம்). இங்கு தள்ளுபடி விகிதம் 10 சதவீதமாகும்.
தள்ளுபடி விகிதம் அதிகமானால், ஒரு தொகையின் நிகழ்கால மதிப்பு குறையும். 20% தள்ளுபடி விகிதம் அளிப்பதாயிருந்தால், ரூ1,000 மதிப்புள்ள ஒரு வருட பத்திரத்தின் நிகழ் கால விலை ரூ.833.33.
அதே போல கால அளவு அதிகமானாலும் நிகழ்கால மதிப்பு குறையும். மேலே சொல்லப்பட்ட பத்திரம் இரண்டு வருடம் கழித்து ரூ.1,000 தருவதாக கூறி இருந்தால், 10 சதவிகித தள்ளுபடி விகிதத்தில் அதனின் நிகழ்கால மதிப்பு ரூ. 826.45.
ஒரு பணப்புழக்கத்தில் உள்ள அனைத்து வருட/மாத வருவாய்களுக்கும் நிகழ்கால மதிப்புகளைக் கணக்கிட்டு நிகழ் காலத்தில் செய்த முதலீட்டுடன் ஒப்பிட்டு பார்த்து லாப/நஷ்ட கணக்குகளைப் போடவேண்டும்.